உத்தரிக்கும் ஸ்தலம்
"PURGATORY"
வாழ்வு
வாழ்வின் முடிவும் - மாசுபட்ட ஆத்மாவும்

      உலக வாழ்வு முடிந்த பின்பு, மாசுபட்ட ஆத்துமாவின் நிலை என்ன?

     ஆன்மா, உத்தரிக்கும் ஸ்தலத்துக்குப் போய், பாவப்பரிகாரம் செய்து முடித்து, பரிசுத்தமடைந்து, மீண்டும் விண்ணுக்குச் செல்லும் - மத் 5 :25-26.

      வாழ்வு எத்தனை வகைப்படும்?

      1. உலக வாழ்வு - ச.உ 2 :3.
      2. மறுஉலக வாழ்வு - உரோ 8:5, 1கொரி 2:15, என இரண்டு வகைப்படும்.

      உலக வாழ்வும், அதன் தன்மைகளும் என்ன?

     இது பாவ உலகம் - லூக் 4 :6 , யோவா 17 :15.
     இந்த உலகத்தின் இன்பங்களுக்கு அடிமைப்படும் வாழ்வு, பாவ வாழ்வு- உரோ 6 :19.
     மனிதன் இவ்வுலகில் அன்னியனும், நாடோடியும், தற்கால குடியுமாயிருக்கிறான் - எபி 11:13.
      உலகில், மனித வாழ்வு நிலையற்றது - 1குறி 29:15.
      இவ்வுலகின் செல்வம், பூச்சியரிக்கும், துருப்பிடிக்கும் - மத் 6 :19.
      இவ்வுலகில், துன்புறுவதற்கென்றே, மனிதன் பிறக்கிறான் - யோபு 5 :7.
      இவ்வுலகில், மனிதனின் வாழ்நாள் புல்லைப்போன்றது - எசா 40:6.

      மறு உலக வாழ்வு எத்தனை வகைப்படும்?

     1. விண்ணுலக வாழ்வு
     2. உத்தரிக்கும் ஸ்தல வாழ்வு – 1பேது 3 :19-20, என இரண்டு வகைப்படும்.

      விண்ணுலக வாழ்வு என்றால் என்ன?

     பாவ மாசுபடாத ஆத்துமா, உடலின் இறப்புக்குப் பின்பு, தாம் வந்த இடமாகிய விண்ணுலகுக்குச் சென்று, அங்கே நித்தியமாய் வாழும் வாழ்வு – 1தெச 5:23 , தானி 12:2-3.

உத்தரிக்கும் ஸ்தலமும் - நரகமும்

      உத்தரிக்கும் ஸ்தலம் உண்டா?

  ஆம் உண்டு - 2மக் 12 :45.

      உத்தரிக்கும் ஸ்தலம் என்றால் என்ன?

     இந்த உலகத்தில், தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்யாதவர்கள், இறந்த பின்பு, மறு உலகில் சென்று, பாவப்பரிகாரம் செய்து, மீட்பை அடையும் இடம், உத்தரிக்கும் ஸ்தலம் - 2மக் 12:45, 1கொரி 3 :15.

      உத்தரிக்கும் ஸ்தலம் எங்கே இருக்கிறது?

     பைபிளில், நாம் காணும் நரகம் தான், உத்தரிக்கும் ஸ்தலம் - 1பேது 3 :19, 4:6.

      நரகம் என்றால் என்ன?

      நரகம் என்றால் ஒரு இடமல்ல. அது ஒரு அனுபவம்.

      நரகம் என்பதன் பொருள் என்ன?

      எபிரேய மொழியில், “நரகம்” என்றால், “இன்னேம் பள்ளத்தாக்கு” என்றும் - யோசு 15 :8, கிரேக்க மொழியில் “கெஹென்னா” அதாவது, “அவியா நெருப்பு” என்பதும் பொருள் - மத் 25 :41.
      இதற்கு, “துன்பம்” அல்லது, “வேதனை” என்றும் பொருள் உண்டு.

      நரகத்துக்கு செல்வது என்றால் என்ன?

     துன்பத்துக்கு அல்லது வேதனைக்கு செல்வது என்று பொருள். அங்கே அழுகையும், அங்கலாய்ப்பும் இருக்கும் - மத் 25:30.

      இறந்த பின்பு, நரகம் அல்லது வேதனை உண்டா?

     உண்டு. அது உத்தரிக்கும் ஸ்தலத்தில் நடைபெறுகிறது - சக் 13:9. “உன்னைப் புடமிட்டு சுத்திகரிப்பேன்” - தானி 12:2-10.

      நரகம் என்பது தண்டனையா?

     நரகம் என்பது தண்டனையே - லூக் 12:47-48.
     அந்த தண்டனை, மனிதனை அழிக்க அல்ல – 1பேது 1 :6-7.
     மாறாக, நரகத் தண்டனை ( துன்ப தண்டனை), மனிதனை மீட்கவே. நெருப்பில் தப்பியவர் போல், அவர்கள் மீட்கப்படுவர் - 1கொரி 3:15.

      மனிதன் இறந்த பின்பு, அவனுக்கு நரகத் தண்டனை எங்கே நடைபெறுகிறது?

     உத்தரிக்கும் ஸ்தலத்தில் நடைபெறுகிறது - மலா 3 :2-6.

      நரகத்தை நாம் ஏன் உத்தரிக்கும் ஸ்தலம் என்று சொல்கிறோம்?

     பைபிள் கூறும், நரகத்தில் நான்கு காரியங்கள் உள்ளன.
      1. அணையா நெருப்பு - மத் 25:41.
      2. அழுகையும் பற்கடிப்பும் அல்லது துன்பம் - மத் 25:30.
      3. புடமிடுதல் - தானி 12 :2-10.
      4. தண்டனை - மத் 23 :33.
 • இந்த நான்கிற்கும் அர்த்தம்

  •    1. நெருப்பு - பரிசுத்தப்படுத்த - எசா 48:10.
      2. துன்பமும் - பரிசுத்தப்படுத்த - எபி 12:7-10.
      3. புடமிடுதல் - அழுக்கைப் போக்க - எசா 1:25.
      4. தண்டனை - திருத்த - எபி 12:7, நீ.மொ 3:11-12.
 • இந்த நான்கும், ஒருவருக்குக் கிடைத்தால், அவர் மீட்பை அடைகிறார். எனவே, “மீட்பைக் கொடுக்கும் நரகத்தை”, நாம் “உத்தரிக்கும் ஸ்தலம்” என்று சொல்கிறோம் - 1கொரி 3:15.

 •     உத்தரிக்கும் ஸ்தலம், நமக்கு தரப்படுகிறதா? அல்லது நாமாக ஏற்றுக்கொள்வதா?

      இந்த உலக வாழ்வில் வரும் துன்பங்களை, ஒருவர் தம் பாவங்களுக்கு பரிகாரமாக, நன்றி, ஸ்தோத்திரம், ஆமென் சொல்லி, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வாராயின், அவருக்கு இந்த “உலக வாழ்வே, உத்தரிக்கும் ஸ்தல வாழ்வாக மாறும்”. அவருக்கு மறு உலகில், உத்தரிக்கும் ஸ்தல வாழ்வு தேவையற்றது - 2மக் 7:18; சா.ஞா 3 :1.
      ஆனால், பாவப்பரிகாரம் செய்யாமல், இன்னும் பாவத்திலேயே வாழ்ந்து மடியும் ஒருவர், மிகுந்த தயவும், இரக்கமும் உள்ள, கடவுளின் கருணையால், மறு உலகிலுள்ள, உத்தரிக்கும் ஸ்தலத்துக்குச் சென்று, அங்கே பாவப்பரிகாரமான துன்ப (நரக) வேதனைகளை அனுபவித்து, பின்பு விண்ணகம் சேருவார் - தானி 12 :10.
     2. அழுகையும் பற்கடிப்பும் அல்லது துன்பம் - மத் 25:30.
     3. புடமிடுதல் - தானி 12 :2-10.

  பழைய ஏற்பாட்டில் - உத்தரிக்கும் ஸ்தலம்

       புதிய ஏற்பாட்டில் சொல்லப்படும், நரகம் என்ற வார்த்தை, பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளதா? இல்லை.

       மனிதர் இறந்த பின்பு செல்லும் இடத்திற்கு, பழைய ஏற்பாட்டில் என்ன பெயர்?

       எபிரேயத்தில் - செல் - SEL
       கிரேக்கத்தில் - ஹாதேஸ் - HADES
       ஆங்கிலத்தில் -ஷேயோல் - SHEOL

       இந்த வார்த்தைகளின் பொருள் என்ன?

       பூமிக்கு அடியில் உள்ள இடம் - எசே 31:15 , தி.பா 86 :13.
       புழுதி படிந்த இடம் - யோபு 17 :12-16.
       இருள் சூழ்ந்த இடம் - யோபு 10 :21.
       ஆழ்ந்த அமைதி நிறைந்த இடம் - தி.பா 94 :17.
       நினைவு அற்ற இடம் - (COMA) - தி.பா 88 :12.
       நிறைவு அடையாத இடம் - நீமொ 27 :20.<
       1. கீழுலகம், 2. கல்லறை, 3. அழிவின் தலம், 4. இருட்டுலகம், 5. மறதி உலகம், 6. பாதாளம் - தி.பா 88 :10-12.

       ஷேயோலுக்குச் செல்பவர்கள் யார் யார்?

  • இறந்த அனைவரும், அங்கே செல்வர். “என் மகன் இருக்கும் பாதாளத்துக்கு நானும் செல்வேன்”- தொநூ 37 :35. “பாதாளம் அனைவரையும் வரவேற்கிறது - எசா 14 :9.

  •     அனைவரும் என்றால் பொருள் என்ன?

       வாழும் மனிதர் அனைவரும், பாவ இயல்பு உடையவரே - உரோ 3 :12.
       எனவே, இறக்கும் அனைவரும், கடவுளின் முன் குறை உள்ளவரே - ச.உ 7 :20.
       எனவே, பாவிகளும், நல்லவர்களும் ஷேயோலுக்கு செல்வார்கள்.

       பாவிகளுக்கு ஷேயோல் எத்தகையதாக இருக்கும்?

       அங்கே, கடவுளால் மறக்கப்பட்டு, கடவுளின் பாதுகாப்பு இல்லாமல் இருப்பார்கள் - தி.பா 88 :5.
       இதுவே, “பெரும் துன்ப நிலை” என்றும் கூறலாம் - யோபு 3 :1-12 , 17 :14-15.

       நல்லவர்களுக்கு ஷேயோல் எத்தகையதாக இருக்கும்?

       நல்லவர்களுக்கு, அது நம்பிக்கைக்குரிய இடம் - தி.பா 49 :15.
       அங்கே, கடவுள் அவர்களோடு இருப்பார் - தி.பா 139 :8.
       கடவுளின் பார்வை, அவர்கள் மேல் இருக்கும் - நீமொ 15 :3.

       விண்ணுலகம் பற்றி, பழைய ஏற்பாடு என்ன சொல்கிறது?

       ஏனோக்கு, எலியா போன்ற, தேவனோடு சஞ்சரித்த நீதிமான்கள், இறந்த பின்பு, நேராக விண்ணுலகிற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள் - தொ.நூ 5 :24 , 2அர 2 :11.
       கடவுள் தன்னை, பாதாளத்துக்கு ஒப்படைக்காமல், இறந்த பின்பு, நேராக விண்ணுலகம் சேர்ப்பார் என்று, தாவீது நம்பினார் - தி.பா 16 :10.

       புதிய ஏற்பாட்டில், நரகம் என்ற சொல்லின் விளக்கம் தருக - மத் 10 :28 , 5 :29-30.

       “கெஹன்னா” என்ற கிரேக்கச்சொல், “நரகம்” என்ற வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்டது.
       கெஹன்னா என்றால், “அவியா நெருப்பு” என்பது பொருள்.

   இதன் வரலாற்றுப் பின்னணி பின்வருமாறு

       இன்னோம் (hinnom) பள்ளத்தாக்கு என்பது, எருசலேமிற்கு மேற்கே உள்ள, ஒரு பள்ளத்தாக்கு - யோசு 15 :8.
       பென் இன்னோம் (Ben hinnom) என்று, பிற்பாடு அழைக்கப்படும் இந்த இடத்தில், பிற ஜாதியார், தங்கள் தெய்வங்களுக்கு, சிறுவர்களை பலியிடுவர் - 2அர 23 :10.
       பிற இனத்தாரைப் பின்பற்றி, இஸ்ராயேலரும் தங்கள் பிள்ளைகளை, அன்னிய தெய்வங்களுக்கு, இதே இடத்தில் பலியிட்டு, பாவம் செய்தனர் - 2குறி 28 :3, 33 :6 , எரே 7 :31-32,
       பிற்காலத்திலும், இயேசு கிறிஸ்துவின் காலத்திலும், இந்த இடத்தில் தான், எருசலேமின் நகர சுத்திகரிப்பாளர்கள், தங்கள் குப்பைகளையும், அழுக்குப் பொருள்களையும் கொட்டுவர். மேலும், ஆலயத்தில் பலியிட்டு மீதி வருகின்ற பாகங்களையும், இங்கேயே தான் கொட்டி எரிப்பர் - லேவி 4 :11-13.
       எனவே, இங்கே நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டிருக்கும்.
       இந்த “அவியா நெருப்புள்ள” இடத்தை, “கெஹன்னா” என்று கிரேக்கத்தில் கூறினர் - மத் 25 :41.
       ஆண்டவர் வரும்போது, பாவிகளைத் தண்டிப்பது, அந்த கெஹன்னாவில் தான் என்ற நம்பிக்கையும், அந்நாட்களில், மக்களிடம் இருந்து வந்தது - மத் 25 :31-33. இவ்வாறு, புதிய ஏற்பாட்டின், “கெஹன்னா” என்ற கிரேக்க வார்த்தைக்கு, விளக்கம் அளிக்கப்படுகிறது.