உத்தரிக்கும் ஸ்தலம்
"PURGATORY"
இறந்தவர்க்கு நற்செய்தி
      இயேசு அறிவிக்கும் நற்செய்தி, “மாபெரும் மகிழ்ச்சி ஊட்டும் நற்செய்தி” - லூக் 2:10. இந்த நற்செய்தி, இறந்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்டதாக, பேதுரு கூறுவார்.

      “அந்நிலையில், இயேசு “காவலில்” இருந்த ஆவிகளிடம் போய்,

      தம் செய்தியை அறிவித்தார் - 1பேது 3 :19.

     “நோவா பேழையை செய்துகொண்டிருந்த நாட்களில், பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தார்

     “கடவுளை, அந்த ஆவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை” – 1பேது 3 :20.

  •    “இறந்தோர் ஊனுடலில் மனிதனுக்குரிய தீர்ப்பு பெறுவர்.

  •    ஆவியில், கடவுளுக்குரிய வாழ்வு பெறுவர்.

  •    இதற்காகவே, “இறந்தோருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது”- 1பேது 4 :6.

     காவலில் இருந்த ஆவிகள்

  •    இங்கே, “காவலில்” என்றால், சிறையில் என்று பொருள்.

  •    சிறையில் இருப்பவர்கள், குற்றம் இழைத்தவர்கள்.

  •    அவர்கள், நிரந்தரமாக அங்கே இருக்கப் போவதில்லை.

  •    தண்டனை முடிந்து, அவர்கள் வெளியே வருவர்.

     ஆவிகள்

  •    இந்த வார்த்தை, கிரேக்கத்தில், “நெயுமா” என்பது.

  •    இதற்குப் பொருள், “அறிவுள்ள ஆவிகள்” (Rational Spirits).

  •    எனவே, காவலில் இருக்கும் ஆவிகள், புரிந்து, தீர்மானிக்கும் சக்தி கொண்டவை.

    கடவுளை ஏற்றுக்கொள்ளாத ஆவிகள்

  •    இந்த ஆவிகள் செய்த குற்றம் என்னவென்றால், கடவுளைப் புறக்கணித்தது.

  •    எனவே, குற்றம் செய்த ஆவிகள், இன்னும் விடுதலையின் நம்பிக்கையோடு காத்திருக்கும் இடம் ஒன்று இருந்தது.

  •    அந்த இடத்தை, புனித பேதுரு “சிறை” (PRISON) என்கிறார்.

    பாதாளமும் - சிறையும்

  •    யூத மரபுப்படி, இறந்தவர் இருக்கும் இடம், பாதாளம் அல்லது கீழுலகம்….

  •    பேதுரு, தான் அறிந்த, பழக்கப்பட்ட அந்த வார்த்தையை இங்கே பயன்படுத்தவில்லை.

  •    மாறாக, “சிறை” என்ற வார்த்தையை, மிகுந்த பொருளோடு கையாண்டார்.

  •    இந்த சிறையைத்தான் நாம், இறந்தவர் பாவக்கடன் தீர்க்கும் இடம், அல்லது மனம் திரும்பும் இடம், அல்லது உத்தரிக்கும் ஸ்தலம் என்கிறோம்.

    இயேசுவின் நற்செய்தி

  •    “எல்லா” மக்களினத்தாரும், “ஏற்றுக்கொள்ளுமாறு” நற்செய்தி அறிவிக்கப்படும். அதன் பின்பு முடிவு வரும் - மத் 24 :14.

  •    “எல்லா மக்களினத்தாரும்” என்பது, இப்போது வாழ்கின்ற, இதற்கு முன்னால் வாழ்ந்த, இனி பிறக்கப்போகின்ற மக்கள் என்று பொருள்.

  •    எல்லாரும், “ஏற்றுக்கொள்ளுமாறு” தான், நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.

  •    முன்னால் வாழ்ந்தவர்கள், “நற்செய்தியை ஏற்றுக்கொள்வது வரை” நற்செய்தி அறிவிக்கப்படும்.

  •    இந்த நற்செய்தியை, அறிவிப்பதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், பாவத்தோடு இறந்தவர்கள், எங்கேயோ ஓர் இடத்தில் இருந்துத்தான் ஆக வேண்டும். அந்த இடத்தை, “காவல்” அல்லது “சிறை” அல்லது “உத்தரிக்கும் ஸ்தலம்” என்று, பைபிள் கூறுகிறது.

சொல்லாலும் செயலாலும் நற்செய்தி
  •    இயேசு, வார்த்தையாலும், செயலாலும் நற்செய்தி அறிவிக்கிறார்.

  •    வார்த்தையை ஏற்றுக்கொள்ளாவிடில், செயலையாவது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று, இயேசு விரும்புகிறார் - யோவா 14 :11.

  •    இயேசுவின் செயல், எப்போதும் அன்பும், நன்மையும் நிறைந்ததாகவே இருக்கும்.

  •    “என் வீடு அது ஜெபவீடு, அதை கள்வர் குகையாக்காதீர்” - லூக் 19:46 - என்று, இயேசு சொல்லால் நற்செய்தி அறிவித்தார்.

   •    “கயிறுகளால் சாட்டைபின்னி, எல்லாரையும் துரத்தினார்” - யோவா 2:15 - இங்கே, இயேசு செயலால் நற்செய்தி கூறினார்.

   •    இங்கே, “அடித்து நொறுக்கி” இயேசு, நற்செய்தி அறிவிக்கிறார்.

   •    இயேசுவின் வார்த்தையும் செயலும் நற்செய்தியே. அதன் நோக்கம், மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான்.

   •    பேசுவதுபோலவே, “அடிப்பதும்” ஏற்றுக்கொள்வது வரை நடைபெறும்.

   •    “தகப்பன் தண்டித்து திருத்துவது போல” என்று, இதை பைபிள் கூறுகிறது -எபி 12:7.

   •    எனவே, “சிறையில்” நடைபெறும் தண்டனையும், நற்செய்தி அறிவிப்பதே.

     துன்பமும் - மனம்திரும்புதலும்

   •    இங்கே, பாவிக்கு ஆண்டவர் அளிக்கும் துன்பம், அவர்களை மீட்கும் நற்செய்தி.

   •    யோவேலின் புத்தகத்தில், பாவம் செய்த மக்களுக்கு, கடவுள் துன்பம் தந்தார் – யோவே 1 :6,7,10,12,16-20.

   •    தொடர்ந்து, “இப்பொழுதாவது திரும்பி வாருங்கள்” என்றார் - யோவே 2 :12-17.

   •    வாழும் பாவிகளுக்கு, கடவுள் தரும் துன்பம், அவர்களை மனம் திருப்பவே - ஓசே 5 :15.

   •    இறந்த பாவிகளுக்கும், கடவுள் இதையே செய்;கிறார். ஏனெனில், இறந்தவர் அவரது குரலைக் கேட்பர். கேட்டு வாழ்வடைவர் - யோவா 5 :25, உரோ 14 :9.

     நற்செய்தியின் தன்மைகள்

   •    நற்செய்தியால், தேவ கிருபை உண்டாகிறது - தி.ப 20 :24.

   •    நற்செய்தி, ஒளியை உண்டாக்குவது – 2கொரி 4 :4.

   •    அமைதி அருளும் நற்செய்தி - எபே 6 :15.

   •    விசுவாசம் உண்டாக்கும் நற்செய்தி - உரோ 10 :14,17.

   •    மீட்பை அளிக்கும் நற்செய்தி - எபே 1 :13.

   •    தூய ஆவி தரும் வல்லமையை அருளும் நற்செய்தி – 1தெச 1 :5.

   •    அழியா வாழ்வை, ஒளிரச் செய்யும் நற்செய்தி - 2திமொ 1 :10.

    •    தேவ கிருபையை ஈந்து, விசுவாசத்தை உருவாக்கி, மீட்பளித்து, அபிஷேகித்து, அழியா வாழ்வைத் தரும் நற்செய்தி, இறந்தவர்க்கு அறிவிக்கப்படுகிறது. அந்த நற்செய்தி, பலன் தராதா? இறந்தவர்க்கு மீட்பளிக்காத ஒரு நற்செய்தியை, இயேசு அறிவிப்பாரா? அப்படியே, இயேசுவின் நற்செய்தியால், இறந்தவர் மீட்படைந்தால், உத்தரிக்கும் ஸ்தலம் என ஒன்று, உண்டு என்பதை, நம்மால் மறுக்கமுடியுமா?

     இறந்தவர்க்கு நற்செய்தியின் நோக்கம் - 1பேது 4:6

   •    இறந்தோர் தங்கள் “ஊன் உடலில்” மனிதனுக்குரிய தீர்ப்புப் பெறுவர்.

   •    பின்பு வாழ்வு பெறுவர்.

   •    இதற்காகவே, இறந்தோருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது.

     பேதுரு காணும் உத்தரிக்கும் ஸ்தலம்

   •    ஆக, மேற்சொன்ன விளக்கங்களில், உத்தரிக்கும் ஸ்தலம் என, ஒன்று உண்டு என்பது தெளிவாகிறது.

   •    அந்த இடத்துக்கு, காவல் அல்லது “சிறை” (PRISON) என்று பெயர்.

   •    அங்கே இருப்பவர்கள், குற்றம் செய்த மனிதர்கள்.

   •    இவர்கள், உணர்வும், அறிவும் உள்ள ஆவிகள் - நெயுமா.

   •    இவர்கள் அங்கே இருப்பது, சிறையிலிருந்து விடுதலை அடைய.

   •    அந்த விடுதலையை அளிப்பவர், இயேசு கிறிஸ்து.

   ஆம் பிரியமானவர்களே! உத்தரிக்கும் ஸ்தலம் என ஒன்று, நிச்சயமாக உண்டு. இவ்வுலகில் வாழும்போது, தம் பாவங்களுக்கு பரிகாரம் செய்யாதோர், அதாவது மனம் திரும்பாதோர் - மறு உலகில், தண்டனை பெற்று, மனம் திரும்பும் இடமே, உத்தரிக்கும் ஸ்தலம்.

   “சாவு” என்பது, பாவத்தின் தண்டனையே. பாவம் போக்கப்படும் போது, சாவும், தாமாக போய்விடும். “சாவே கடைசிப் பகைவன். அதுவும் அழிக்கப்படும்” – 1கொரி 15:26. இந்த உலகில், பிறக்கும் கடைசி மனிதனில் ஆட்சிபுரியும் “சாவு” அழிக்கப்படுவது வரை, இயேசுவின் மீட்புப்பணி தொடரும். இங்கே உலகில், அங்கே உத்தரிக்கும் ஸ்தலத்தில்.

     இறந்தவர்க்காக திருமுழுக்கு

    இறந்தவர்களுக்காக, சிலர் திருமுழுக்குப் பெறுகிறார்களே! ஏன் அப்படி செய்கிறார்கள்? இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவது இல்லை என்றால், அவர்களுக்காகத், திருமுழுக்குப் பெறுவானேன்? – 1கொரி 15 :29.

     பாவத்தில் இறந்தவர்களுக்காக ஜெபம் - தானியேலின் ஜெபம் - தானி 9 :3-19.

     தானியேலும், மக்களும் அடைந்த துன்பம்

   •    எங்களுக்கு அவமானமே கிடைத்துள்ளது - தானி 9 :7.

   •    நாங்கள் தொலை நாட்டுக்கு விரட்டப்பட்டுள்ளோம் - தானி 9 :7.

   •    திருச்சட்டத்தில், எழுதியுள்ள எல்லா சாபக்கேடும், எங்கள் தலைமேல் கொட்டப்பட்டன - தானி 9 :11.

   •    உலகில் எங்களுக்கு, உற்ற துன்பம் போல், வேறு யாருக்கும் நடக்கவே இல்லை - தானி 9 :12.

   •    ஆண்டவருடைய சினத்துக்கும், சீற்றத்துக்கும், நிந்தைக்கும் நாங்கள் உள்ளானோம் - தானி 9 :16.

     இந்த துன்பத்துக்கு காரணம்

   •    நாங்கள் பாவம் செய்தோம் - தானி 9 :5.

   •    எங்கள் தலைவர்கள், தந்தையர், அரசர் இவர்கள் கொடிய பாவம் செய்தார்கள் - தானி 9 :6, 16.

     மனஸ்தாபமும் - பாவ அறிக்கையும்

   •    நான் நோன்பிருந்து, சாக்கு உடை அணிந்து, சாம்பலில் அமர்ந்து மன்றாடினேன்.

   •    நாங்கள் வழிதவறினோம் , உம் கட்டளைகளை கைவிட்டோம் - தானி 9 :5.

   •    உமக்கு எதிராக, துரோகம் செய்தோம் - தானி 9 :7.

   • >
   •    உமது இறைவாக்கினர் கூறிய வழியில், நடக்கவில்லை - தானி 9 :10,11.

   •    நாங்களும், எங்கள் முன்னோரும், உமக்கு உகந்தவர்களாய் நடக்க முயலவில்லை - தானி 9 :13.

   •    எங்கள் பாவங்களாலும், எங்கள் “முன்னோரின்” கொடிய பாவங்களாலும், இன்று துன்புறுகிறோம் - தானி 9 :16.

     மன்னிப்பு வேண்டி ஜெபம்

   •    ஆண்டவரே! உம்மிடம் இரக்கமும், மன்னிப்பும் உண்டு - தானி 9 :9.

   •    எங்கள் கடவுளே! எங்களை மன்னித்தருளும். எங்களுக்காக செயலாற்ற வாரும் - தானி 9 :17-19.

     தானியேலின் ஜெபம் கேட்கப்பட்டது

   •    “தானியேல் ! அஞ்சாதே! உய்த்துணர வேண்டும் எனும் உள்ளத்தோடு, உன் கடவுள் முன்னிலையில், நீ உன்னைத் தாழ்த்திக்கொண்ட முதல் நாள் தொடங்கி, உன் மன்றாட்டு கேட்கப்பட்டு வருகிறது. உன் மன்றாட்டுக்கேற்ப, இதோ! நான் வந்துள்ளேன்” - தானி 10 :12.

     இன்றைய வாழ்வோரின் பாவமும், நேற்றைய முன்னோரின் பாவமும் மன்னிக்கப்பட்டது

   •    இங்கே முன்னோர் செய்த பாவங்களாலும், தாங்கள் செய்த பாவங்களாலும், துன்பம் வந்துள்ளது.

   •    தாங்கள் செய்த பாவங்களுக்காக, இங்கேயே தண்டனை அனுபவிக்கிறார்கள்.

   •    அதுபோலவே, முன்னோர் செய்த பாவங்களுக்கும், தண்டனை உண்டு.

   •    அந்த தண்டனையை அவர்கள் அனுபவிக்கும் இடமே, “உத்தரிக்கும் ஸ்தலம்”.

   •    தானியேல், அவர்களின் பாவங்களும், தங்களின் பாவங்களும், மன்னிக்கப் படும்படி, மன்றாடுகிறார் - தானி 9 :16 - 19..

   •    அவர் ஜெபம் கேட்கப்பட்டதாக, விண்ணிலிருந்து பதில் வந்தது - தானி 10 :12.

   •    சைரசு மன்னனின் வழியாய், இங்கே தானியேலுக்கு விடுதலை - 2குறி 36 :22,23.

   •    இயேசு கிறிஸ்துவின், பாடுகளாலும், மரணத்தாலும் அங்கே முன்னோருக்கு விடுதலை - மத் 20 :28 , 26 :28.

   •    இவ்வுலகில் வாழ்வோர், தங்கள் பாவங்களுக்குப் பொறுத்தல் வேண்டி, ஜெபிப்பது போலவே, தங்கள் முன்னோரின் பாவங்களுக்காகவும், தானியேலைப் போல ஜெபிக்கலாம்.

   •    அந்த ஜெபம் கேட்கப்படும், விடுதலையும் கிடைக்கும் - தானி 10 :12.