#


இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

இயேசு சுமந்து வந்த சிலுவையின் பாரம், எவ்வளவுக் கொடியது என்றால், அவரை கொல்கத்தாவரை சுமந்து செல்ல அது அனுமதிக்கவில்லை. பிலாத்துவின் அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது, இயேசுவுக்கு இருந்த மனபலம், சரீர உறுதி இப்போது இல்லை. சிலுவையின் பாரமும், போகப் போக அதிகரித்தது. வழி எங்கும், மக்கள் கூட்டம் கூடி நின்று, அவரை எள்ளி நகையாடி பரிகசித்தது. இயேசுவைப் பற்றி ஏற்கனவே திருப்தி இல்லாத யூதர்கள், இப்போது நடப்பதை எண்ணி, தங்கள் ஐயப்பாடுகள் சரி என்று உறுதிப்படுத்தினர். இயேசுவை விரோதிகள் தண்டித்தது, “பொறாமை” யால்தான் என்று பிலாத்து உணர்ந்திருந்தான். அந்தப் பொறாமைக் கூட்டம், கொக்கரித்துக் கூத்தாடியது. இயேசுவின் கரத்தினின்று அற்புதங்களையும், ஆறுதலையும் பெற்றுக் கொண்ட, எளிய மக்களை, பாதை எங்கும் இயேசு கண்ட போது, அவர்களையும் சேர்த்து, பரிசேயர்கள் பரிகசித்த போது, இயேசுவுக்கு, உண்டான துயரம், பன்மடங்காகி அவரை மீண்டும் தரையிலே வீழ்த்தியது. அந்த பரிசுத்த முகம் புழுதியில் புதைந்தது.

சிந்தனை:

இயேசுவே, நன்றியின்மை எவ்வளவு பெரிய பாவம்.

நான் இன்று, இந்த நிலையில் இருக்கிறேன் என்றால், அது எத்தனையோ பேருடைய தியாகத்தால்.

அது எத்தனையோ பேருடைய இழப்பால், எத்தனையோ பேருடைய பலியால்,

என் தாய், என் தந்தை, என் உடன்பிறப்புகள், என்னை சார்ந்தவர்கள், என் கணவன், என் மனைவி,

என் பிள்ளைகள், என் நண்பர்கள், என் சுற்றத்தார், என் உபகாரிகள். ஓ… அடுக்கி கொண்டே போகலாமே.

இவர்கள் எல்லாம் சுயநலம் மறந்து, தங்களுடைய வசதிகளையும், வாழ்க்கையையும் இழந்து, பலியாகி,

என்னை வளர்த்து ஆளாக்கி, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்களே,

ஒருவிசை கூட, அவர்களுடைய துயரங்களை, கஷ்டங்களை, நான் நினையாமல் வாழ்ந்திருக்கிறேனே.

என்னை வளர்த்தவர்கள், வீழ்ந்து கிடக்கப் பார்த்தும், பாரமுகமாய் இருந்திருக்கிறேனே,

அவர்களுக்கு கை கொடுத்து தாங்குவது என் கடமை என்பதை உணராமலேயே, மரத்துப் போயிருந்தேனே.

உலக ஆதாயங்களுக்காக, என் நேசருடைய வழிகளையும், சத்தியங்களையும் தூக்கி எறிந்திருக்கிறேன்.

என்னை ஆரத் தழுவி ஏற்றுக்கொண்ட என் நேசரை நான் பலமுறை புறக்கணித்திருக்கிறேன்.

அவரை அறியேன் என்று பலமுறை சொன்னேன்.

என் ஆண்டவரை மூன்றாம் முறையாக வீழ்த்தியது, என்னுடைய இந்த கொடிய பாவங்கள் என்று ஏற்றுக் கொள்கிறேன்.

இனி ஒரு போதும், இப்படிப்பட்ட பாவங்களை செய்வதில்லை என்று பலமுறை தீர்மானம் எடுத்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும், தீர்மானம் எடுத்து முடியும் போது, மீண்டும் அதே பாவத்தில் நான் விழுந்து கிடப்பதை உணர்கிறேன்.

என் தீர்மானத்தில் நிலைத்து நிற்க முடியாத கொடிய பாவத்தினால், இயேசுவே மூன்றாம் முறை உம்மை கீழே விழத்தாட்டினேன்.

“எழுந்திரு”, “எழுந்து பிரகாசி”, “எழுந்திரு, நீ செல்ல வேண்டிய பாதை இன்னும் தூரம் உண்டு”; “எழுந்து உன் படுக்கையை எடுத்து கொண்டு நட” என்று, விழுந்த உலகத்தை எழும்ப சொன்ன இயேசுவே,

விழுந்து கிடந்த உலகத்தை, எழுப்பி விட்ட இயேசுவே! நான் விழுந்த இடமே சுகம் என்று, எழும்ப மனமின்றி, காலம் தாழ்த்துகிறேனே!

ஐயா! ஊதாரி மைந்தனும், நாற்றம் தாங்காமல், எழுந்து தந்தையிடம் திரும்பியது போல,

நானும் இந்த நோன்பு காலத்தில் உம்மிடம் எழுந்து வருகிறேன். என்னை பொறுத்து, ஏற்றருளும் சுவாமி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு