#


இயேசு எருசலேம் மகளிருக்கு ஆறுதல் சொல்கிறார்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

இயேசுவின் பணியிலே, அவரோடு இணைந்து உழைத்தவர்களும், பணியில் பங்கு பெற்றவர்களுமாக, அனேக பெண்கள் இருந்தனர் - பெரும்பாலும் உள்ளவர்கள், அவரிடமிருந்து கிருபைகளைப் பெற்றுக் கொண்ட, உயர்குலப் பெண்கள். இயேசு யார் என்பதையும், அவர் எந்த அளவுக்கு பரிசுத்தர் என்பதையும், நன்கு உணர்ந்தவர்கள் அவர்கள். இயேசுவுக்கு உண்டான இந்த பெரும் துன்பத்தில் பங்கு கொள்ள, அவர்கள் குடும்பம் குடும்பமாக முன் வந்தனர்.

சிந்தனை:

ஏற்கனவே, வெறோணிக்காள் தன் விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கையிட்டாள் என்பதைப் பார்த்தேன்.

இதோ! மற்றொரு விசுவாசக்கூட்டம், தங்கள் விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கையிடுகிறது.

படைவீரர்கள் சூழ்ந்து நின்ற இடம் அது.

பொதுவாக, கொலையாளிகளை இழுத்து செல்கின்ற இடங்களில் பெண்கள் செல்வதில்லை.

காரணம் அந்த நிஷ்டூரக் காட்சிகளைக் காண பெண்களுக்குப் பொறுக்காது.

ஆனால் இங்கோ, உயர் குலத்துப் பெண்கள் பலர் வீதிகளில் இறங்கி வருகிறார்கள்.

இயேசுவின் பொருட்டு, அவர்பட்ட பாடுகளின் பொருட்டு, அவர் பட்ட நிந்தைகளின் பொருட்டு, அவற்றில் தாங்களும் பங்குபெற வந்தார்கள்.

பிற்காலத்தில் இயேசுவின் பொருட்டு, இலட்சோக இலட்ச விசுவாசிகள்,

தங்களை சிலுவையில் அறைந்து கொல்லும்படி, கொப்பரைகளில் போட்டு எரிக்கும்படி, வாளால் தலை வெட்டும்படி கையளித்தார்களே! அந்த இரத்த சாட்சிகளின், தொடக்க சாட்சிகள் இவர்களே!

ஆம்! இனிமேல், என் இயேசுவுக்காக, நான் எந்த பாடுகளையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருப்பேன்.

என் பாவத்தையும், என் பாடுகளையும் சுமந்த என் நேச இயேசுவே,

நீர் எனக்குத் தந்த பிள்ளைகள், உம்முடைய சொத்து என்று உணராமல், நீர் எனக்கு தந்த கொடை என்பதை உணராமல்,

இந்த பிள்ளைகள் உமக்கு திருப்பித் தரப்பட வேண்டியவர்கள் என்பதை எண்ணாமல், அகந்தையோடு வாழ்ந்திருக்கிறேன் ஐயா.

என் பிள்ளைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் இருந்திருக்கிறேன்.

என்னுடைய கோபதாபங்களாலும், எரிச்சல்களாலும், பொறுமையின்மையாலும், பாவ அசுத்தங்களாலும்,

என் பிள்ளைகளுக்கு நான் துர்மாதிரியாய் இருந்திருக்கிறேன் ஆண்டவரே.

அந்த பிஞ்சு உள்ளங்களை நான் காயப்படுத்தியிருக்கிறேன்

அப்பா. அவர்கள் இன்று வளர்ந்து, அவர்களோடு அவர்கள் காயங்களும் வளர்ந்து தவிப்பதை உணர்கிறேன் சுவாமி.

என் பாவங்களை பொறுத்தருளும்.

இயேசுவே, நீர் இம்மையில் வாழ்ந்த போது, அழுது புலம்பி கண்ணீர் வடித்து ஜெபித்தீரே.

நானோ, ஜெபத்தில் கண்ணீர் விட்டு அழ பலமுறை வெட்கப்பட்டிருக்கிறேன்.

பச்சை மரமான உமக்கு

பாவம் பெரிய தண்டனை தந்ததென்றால்,

பட்ட மரமாகிய எனக்கு, என் பாவத்தால் உண்டாகப்போகும் தண்டனை என்ன என்பதை இப்போது உணர்கிறேன்.

இயேசுவே! என் பாவத்தின் மட்டில் எச்சரிக்கையாயிருந்து, அழுது புலம்பி ஜெபிக்க, இப்போது தீர்மானிக்கிறேன்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு