#


இயேசுவின் முகத்தை வெறோணிக்கம்மாள் துடைக்கிறாள்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

அத்தனை நெருக்கடியிலும், ஒரு வீரப்பெண் வேறோணிக்காள், துணிந்து இயேசுவிடம் வருகிறாள். அவருடைய இரத்தக்கறை படிந்த முகத்தை, தன் துண்டால் துடைக்கிறாள். இயேசுவின் மீது அவளுக்கிருந்த அன்பையும், அசையாத மன உறுதியையும், இவ்வாறு வெளிப்படுத்தினாள். ஆண்டவருடைய துன்பத்தில் பங்கு கொண்டது மல்லாமல், சுற்றிலும் சூழ்ந்து நின்ற அத்தனை கொலைஞர்களுக்கும், அவள் ஒரு விசுவாச வீரங்கனையானாள்.

சிந்தனை:

தம் குமாரனின் சாயலாக நான் உருமாற வேண்டுமென்பது பிதாவின் திட்டம்.

அந்த இயேசுவினுடைய சாயலை நான் பெற்றுக் கொள்வதை விட்டு விட்டு,

என் முகத்தின் பாவ சாயலை, நான் அவர் முகத்தில் பதித்தேன்.

பரிசுத்தருடைய முகத்தை பாவமுகமாக்கினேன்.

என் பாவ சிந்தனையால், என் பாவ சொல்லால், என் பாவ செயலால், என் கடமையில் தவறியதால்,

நான் உருவாக்கிய அந்த பாவ முகத்தின் கறையை அகற்றும் பணியை வெறோணிக்காள் செய்தாள்.

அவரோடு சேர்ந்து, நானும் இனி என் பாவ முகத்திலிருக்கும் கறைகளை அகற்ற முயற்சி எடுப்பேன்.

என்னை வெளிப்படையாக ஏற்றுக் கொள்பவனை, நானும் வெளிப்படையாக ஏற்று கொள்வேன்.

என்னை வெளிப்படையாக ஏற்று கொள்ள வெட்கப்படுபவனை குறித்து, நானும் வெட்கப்படுவேன் என்று சொன்ன இயேசுவே!

பல சந்தர்ப்பங்களில் என் விசுவாசத்தை வெளிப்படையாக காட்ட நான் தவறி இருக்கிறேன்.

அச்சம், கூச்சம், வெட்கம் போன்றவை, என் விசுவாச வாழ்க்கையின் வேகத்தை தடை செய்தது.

பரிசுத்தரே! அத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம், நான் பரிசுத்த வெறோணிக்காளை நினைவு கூர்வேன்.

நேசரை, எந்த சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையாக உம்மை ஏற்று கொள்வேன் என்று இப்போது தீர்மானிக்கிறேன்.

இயேசுவே, பிறருடைய துன்பத்தில் அவர்களைத் தாங்குவதில் நான் ஒருபோதும் வெட்கப்படமாட்டேன்.

பிறருடைய துன்பத்தில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதில், நான் ஒரு போதும், பின் வாங்கமாட்டேன் என்று, இந்த பரிசுத்த வேளையில் தீர்மானம் எடுக்கிறேன்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு