#


இயேசு தன் தாயை சந்திக்கிறார்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

முப்பது ஆண்டுகள் சரீரத்தில் தூக்கி சுமந்த தாய், மூன்று ஆண்டுகள் மனத்திலும், ஆத்துமாவிலும் தூக்கி சுமந்த தாய், தன் மகன் சிலுவை சுமந்து வரும் சொல்லொண்ணா காட்சியைக் காண்கிறார். தன் தோளைத் தழுவி வளர்ந்த மகனின் கரங்கள், சிலுவையை தழுவியிருந்தன. தன் முகத்தில் முகம் பதித்த இயேசுவின் திவ்ய முகம், இரத்தக்கறைபடிந்திருந்தது.

சிந்தனை:

“தாய் தந்தையரை போற்று” என்ற கட்டளையால், பெற்றவர்களை தாங்க வேண்டும், போற்ற வேண்டும் என்று கற்றுத் தந்தீர்.

இயேசுவே, சின்னப் பருவத்திலிருந்து, இந்த நாள் வரை நான் என் பெற்றோரை எத்தனையோ முறை துயரப்படுத்தியிருக்கிறேன்.

வருத்தப்படுத்தியிருக்கிறேன், அவமதித்திருக்கிறேன்.

நான் எதிர்பார்க்காதது அவர்கள் எனக்கு செய்த போதெல்லாம்,

நான் எதிர்பார்த்தது அவர்கள் எனக்கு செய்யாத போதெல்லாம், நான் அவர்களை துன்புறுத்தியிருக்கிறேன்.

பெற்றோர் என்றால் யார்? அவர்கள் பாரம் என்ன? அவர்கள் எவ்வளவு பெரியவர்கள், உயர்ந்தவர்கள் என்பதையெல்லாம் நான் எண்ணாமல், என்னுடைய அகந்தையாலும், சிறுபிள்ளைத் தனத்தினாலும் நான் அவர்களை துயரப்படுத்தி இருக்கிறேன்.

தெய்வமே, என்னைப் பெற்றவர்களின் மனதைப் புண்படுத்தி, அவர்களை காயப்படுத்திய என் பாவமே,

இந்த 4-ம் ஸ்தலத்தை உருவாக்கியது என்பதை அறிகிறேன். ஐயா! இந்த உலக வாழ்வில், உமது தாய்க்கு செய்ய வேண்டிய உம் கடமையை, நீர் செய்ய விடாமல் தடுத்தது என் பாவம்.

நான் பாவம் செய்யும் போது, அது எவ்வளவு கொடியது என்ற உணர்வே இல்லாமல், அனேக விசை நான் பாவம் செய்தேன்.

என் பாவம் இயேசுவை மட்டுமல்ல் அவர் குடும்பத்தை மட்டுமல்ல அவரை சார்ந்த அனைவரையும் பாதித்திருக்கிறது என்பதை இப்போது உணர்கிறேன்.

நான் என் வாழ்க்கையில் ஒருவருக்கு இழைக்கின்ற குற்றம்,

அது பேச்சாக இருக்கலாம், எண்ணமாக இருக்கலாம், செயலாக இருக்கலாம்.

அது அவரை மட்டுமல்ல, அவரை சார்ந்த குடும்பம் முழுவதையுமே பாதிக்கிறது என்பதை இந்த பரிசுத்த வேளையில் உணர்ந்து கொள்கிறேன்.

ஒவ்வொரு முறை, பாவ சந்தர்ப்பங்களில் நான் நிற்கும் போது,

பாவம், இயேசுவை, அவர் தாயிடமிருந்து பிரிக்கும் சக்தி கொண்டது என்பதை எப்போதும் உணர்வேன்.

இயேசுவே! என்னால் காயப்பட்ட என் பெற்றோரின் காயங்களை குணப்படுத்தி, வியாகுல அன்னையின் காயங்களை ஆற்றுவேன் என்று இப்போது தீர்மானம் எடுக்கிறேன்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு