#


இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்:

பாடல் : -

மூன்றாம் முறை அந்தோ! இயேசு விழும் காட்சியைப் பார்!

ஒரே சொல்லால் விண்ணும் மண்ணும் படைத்திட்ட தேவன் அவர்

முடியாமல் மண்டியிட்டு, மண்ணில் விழும் கொடுமை பார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும், உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில், கத்தாத செம்மறி போலும், அவர் தம் வாயைத் திறவாதிருந்தார் - எசா 53:7.

தியானம் :

இயேசு சுமந்து வந்த, சிலுவையின் பாரம், எவ்வளவுக் கொடியது என்றால், அவர் அதை, கொல்கொத்தா வரை சுமந்து செல்ல, அது அனுமதிக்கவில்லை. பிலாத்துவின் அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது இயேசுவுக்கு இருந்த மனபெலமும், சரீர உறுதியும் இப்போது இல்லை. சிலுவையின் பாரமும் போகப் போக அதிகரித்தது. வழி எங்கும், மக்கள் கூட்டம் கூடி நின்று, அவரை எள்ளி நகையாடி பரிகசித்தது.

இயேசுவின் கரத்தினின்று, அற்புதங்களையும், ஆறுதலையும் பெற்றுக் கொண்ட, எளிய மக்களை, பாதை எங்கும் இயேசு கண்ட போது, அவர்களையும் சேர்த்து, பரிசேயர்கள் பரிகசித்த போது, இயேசுவுக்கு உண்டான துயரம், பன்மடங்காகி, அவரை மீண்டும் தரையிலே வீழ்த்தியது. அந்தப் பரிசுத்த முகம் புழுதியில் புரண்டது.

வசனம் :

இனி வாழ்பவன் நானல்ல, கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன் மீது கொண்டுள்ள, நம்பிக்கையின் அடிப்படையில், நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்பு கூர்ந்தார். எனக்காக, தம்மையே ஒப்புவித்தார் - கலா 2:20.

சிந்தனை:

என் அன்புப் பிள்ளையே!

என் சிலுவையின் பாதையில், நான் மூன்றாம் முறையாக, விழுந்து கிடப்பதைக் காண்கின்றாய்.

என் சிலுவைப்பாதையில், நான் பலமுறை அனுபவித்த, ஒரே துன்பம் நான் பாரச்சிலுவையோடு, தரையிலே விழுந்தது தான்.

ஏதேன் தோட்டத்தில், தொடங்கிய வீழ்ச்சி, இன்னும் தொடர்ந்து கொண்டே யிருப்பதைத் தான், இது காட்டுகிறது.

நீ பாவம் செய்யும் ஒவ்வொரு வேளையும், உனக்கு வீழ்ச்சியே.

நடமாட்டம், ஜீவனுக்கு அடையாளம்.

வீழ்ச்சி, சாவுக்கு அடையாளம்.

பாவம், சாவின் மறுபக்கம்.

நீ எப்போது விழுகிறாய்? உன் காலின் உறுதி தளரும் போது.

அவ்வண்ணமே, உன் விசுவாசத்தின் உறுதி தளரும் போது, நீ பாவத்தில் விழுகின்றாய்.

இறை ஒன்றிப்பிலிருந்து, நீ விலகும் போது, மூட்டு விலகிய கால் போல், நீ பாவத்தில் தள்ளாடி விழுகின்றாய்.

என் மகனே! என் மகளே!

நீ தீர்மானமெடுக்கும் ஒவ்வொரு முறையும், என்னோடு உனக்குள்ள உறவை பெலப்படுத்துகின்றாய்.

நீ விழுந்த இடத்திலிருந்து, எழுந்து மீண்டும் நடக்க ஆரம்பிக்கின்றாய்.

உன் மனம், விசுவாசத்தில் உறுதியற்றுப் போகும் போது, மீண்டும் பாவத்தில் விழுகின்றாய்.

ஆனால், ஒவ்வொரு முறை, நீ உன் தீர்மானத்தில் பின்வாங்கி, விழுந்து போகும் வேளையிலும், கல்வாரியில் நான் விழுந்து கிடக்கும் காட்சி, உன் மனக்கண் முன் வரட்டும்.

உன் ஈவு இரக்கமற்ற, பாவங்களின் அழுத்தம், என்னைத் தரையில் சாய்த்தது.

சாட்டையடிகளின் காயங்கள், முள்முடியின் அழுத்தம், அடிகளால் உண்டான, உடல் வலி, அவமானத்தால் உருவான, மன உளைச்சல், அத்தனையும் ஒருசேர, என்னைத் தரையில் வீழ்த்தியது.

மகனே! போதும் உன் பாவ வாழ்வு.

இதோ! உன் பாவத்திலிருந்து நீ எழும் போது, நீ என்னைத் தரையிலிருந்து தூக்கி விடுகின்றாய்.

வா! எனக்கு உன் கரம் தந்து, என்னைத் தூக்கிவிட வா!

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .