#


சிலுவையின் பாதையில், தன்னைப் பின்தொடர்ந்த மகளிருக்கு, இயேசு ஆறுதல் கூறுகின்றார்:

பாடல் : -

அழுதிட்ட மகளிர்க்கந்தோ! புத்தி சொல்லும் காட்சியைப் பார்!

தமக்காக அல்ல தங்கள் பிள்ளைகள்க்காய் அழச் சொன்னார்

பச்சை மரப் பாடைக்கண்டு, பட்ட மரம் மாறச் சொன்னார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

அவர் ஒடுக்கப்பட்டார், சிறுமைப்படுத்தப்பட்டார், ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை – எசா 53:7.

தியானம் :

இயேசுவின் பணியிலே, அவரோடு இணைந்து உழைத்தவர்களும், பணியில் பங்கு பெற்றவர்களுமாக, அனேக பெண்கள் இருந்தனர். அவர்களில் அனேகர், இயேசுவிடமிருந்து விடுதலையைப் பெற்றுக்கொண்ட, உயர்குலப் பெண்கள். இயேசு யார் என்பதையும், அவர் எந்த அளவுக்குப் பரிசுத்தர் என்பதையும், நன்கு உணர்நதவர்கள் அவர்கள். இயேசுவுக்கு உண்டான, இந்த பெரும் துன்பத்தில் பங்கு கொள்ள, அவர்கள் குடும்பம் குடும்பமாக முன்வந்தனர். பச்சை மரத்துக்கே இந்தப் பாடு என்றால், பட்ட மரத்தின் நிலை என்ன? என்று, இயேசு அவர்களை எச்சரித்தார். அவர்களின் பிள்ளைகளின் மீது அக்கரை கொண்டவராய், உங்கள் பிள்ளைகளுக்காக அழுங்கள் என்றார். ஒரு விசுவாச சேனை பின்தொடர, இயேசுவின் சிலுவையின் பயணம் தொடர்ந்தது.

வசனம் :

நாம் பாவிகளாய் இருந்தபோதே, கிறிஸ்து நமக்காக தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு, கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார் - உரோ 5:8.

சிந்தனை:

என் மகனே! என் மகளே!

கல்வாரி நோக்கிய என் பயணத்தில், எனது நிலையைக் கண்டு, மாரடித்து அழும், ஒரு கூட்டம் மக்களைப் பார்.

இவர்கள், எந்த துன்பத்தின் மத்தியிலும், என்னைப் பின்செல்பவர்கள்.

இவர்கள், என் துன்ப சோதனை நேரத்தில், என்னோடு இறுதிவரை நிலைத்திருந்தவர்கள்.

தங்கள் விசுவாச வாழ்வில், பாடுகள் எதிர்கொள்ளும் போது, பின்வாங்கி ஓடாத, இரத்தசாட்சிகள் இவர்களே!

இந்த மக்களை உற்றுப்பார்த்தால், இன்னும் ஓர் உண்மை விளங்கும்.

இவர்கள், நீதி சாவதை காண சகியாதவர்கள்.

தர்மம் அழிக்கப்படுவதை, பொறுத்துக் கொள்ளாதவர்கள் இவர்கள்.

தங்கள் கண் எதிரே, சத்தியம் சாகடிக்கப்படும் போது, துணிச்சலோடும், வெளிப்படையாகவும், அதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் இவர்கள்.

மகனே! ஏதோ சில பெண்கள், உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று, இந்நிகழ்ச்சியை தட்டிக் கழிக்காதே.

இவர்களே பிற்காலத்தில், இரத்தசாட்சிகளைப் பெற்றெடுத்த வீரத்தாய்மார்கள்.

இத்தகையவரின் பாறை போன்ற விசுவாசத்தின் மேல்தான், என் ஆவிக்குரிய திருச்சபை கட்டியெழுப்பப்பட்டது.

இந்த வேளை, நான் இரண்டு எச்சரிப்புகளை, அவர்களுக்குத் தந்தேன்.

முதலாவது, துன்பத்தைப் பற்றிய எச்சரிப்பு.

தந்தையின் விருப்பத்தை எப்போதும் செய்து, அவருடைய ஜீவனோடு எப்போதும் ஒன்றித்திருக்கும், பச்சைமரமாகிய என்னையே, பாவத்தின் விளைவான சாபம், இவ்வளவு தாக்கும் என்றால்,

தந்தையின் விருப்பத்தை மீறி, ஜீவனை இழந்த, பட்டமரங்களாகிய மக்களை, சாபம் எவ்வளவு கொடுமையாய் தாக்கும்!

இரண்டாவது, தங்கள் பிள்ளைகளின் மட்டில், பெற்றோர் வைக்க வேண்டிய, எச்சரிப்பு.

உலகப்பற்றின் மிகுதியால், பிள்ளைப் பாசம் என்ற பெயரில், பிள்ளைகளின் சிறு வயதிலேயே, அவர்கள் செய்யும், தவறுகளைக் கண்டுகொள்ளாமலிருக்கின்றாய்.

தீமை, விதையாக இருக்கும் போதே, அதை அழித்துவிடாமல் இருப்பவர்களுக்கு, அது முளைத்து, மரமான பின்பு, எதுவும் செய்ய முடியாத நிலை உண்டாகும்.

தங்கள் பிள்ளைகளே, தங்களுக்கு சாபமாக மாறிவிடுகின்றார்கள்.

என் மகனே! மகளே!

என் கல்வாரியின் குரல் கேட்டு, என் பின்னே வா!

உன் அன்றாடச் சிலுவையின் பாதை, இனிதாகவும், எளிதாகவும் மாறும்.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .