#


இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்

பாடல் : -

இரண்டாம் முறை அந்தோ! இயேசு மீண்டும் விழுவதைப் பார்!

பாவத்திலே மீண்டும் மீண்டும் விழுந்தெழுந்த குற்றத்திற்காய்

பரிசுத்தர் இயேசு இன்று, புழுதியில் புரள்கின்றார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

அவர் இகழப்பட்டார், மனிதரால் புறக்கணிக்கப்பட்டார். வேதனையுற்ற மனிதராயிருந்தார். நோயுற்று நலிந்திருந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:3.

தியானம் :

இயேசு மீண்டும் கீழே விழுகிறார். சிலுவையின் பாரம், அவரை அதிகமாக அழுத்தியது. மரச்சிலுவையின் பாரத்தைவிட, மனச்சிலுவையின் பாரம், இயேசுவுக்கு மிகுந்த களைப்பை உண்டாக்கியது. கசையடிகளால், உடலில் களைப்பு, ஆனால், செல்லும் வழியில் கிடைத்த வசை அடிகளால், மனதில் களைப்பு. நிந்தை, அவமானம், என்று, அனைத்து உபாதைகளும், அவர் சிலுவையின் அழுத்தத்தை அதிகரித்தது. இந்த மண்ணுலகை உண்டாக்கிய பரிசுத்தர், மண்ணோடு மண்ணாக புரள்கின்றார்.

வசனம் :

கிறிஸ்து இரத்தம் சிந்தி, தம் அருள் வளத்திற்கேற்ப, நமக்கு மீட்பு அளித்துள்ளார். அம்மீட்பால், குற்றங்களிலிருந்து, நாம் மன்னிப்பு பெறுகிறோம் - எபே 1:7.

சிந்தனை:

என் மகனே! என் மகளே!

இன்று இந்த உலகின் மிகப்பெரிய பாவம், எது என்றால், பாவத்தை நியாயப்படுத்தும் கொடுமை.

பாவத்தை நியாயப்படுத்துபவன் தான் பாவி. பாவத்தை அறிக்கையிட்டு விட்டு விடுகிறவன், பரிசுத்தன், நீதிமான்.

பாவி, விழுந்த இடத்திலேயே படுத்திருப்பான்.

பரிசுத்தவான்கள், எத்தனை முறை விழுந்தாலும், அத்தனை முறையும், மனம் வருந்தி, கண்ணீர் சிந்தி, திரும்பி வருவர்.

மகனே! இன்றைய உலகின் பெரிய சாபத்தீட்டு, எடுத்ததற்க்கெல்லாம் சாக்குப் போக்கு கூறும் நிலை.

தவறுவது மனித இயல்பு. ஆனால், சாக்குப்போக்கு சொல்வதோ, பேயின் இயல்பு.

அவன், தான் விழுந்த இடத்தையே, தனக்கு கல்லறை குழியாய் மாற்றி விடுகிறான்.

இன்று, பாவமும் அதன் விளைவான சாபமும், மலியக் காரணமே இதுதான்.

மகனே! பாவத்தின் மட்டில், அச்சம் உடையவன், விழுந்த இடத்திலேயே, படுத்துக் கொள்ளமாட்டான்.

கல்வாரியில், என் இரு பக்கங்களிலும், இரண்டு பேர், சிலுவையில் அறையப்பட்டார்கள்.

இருவரும் பாவம் செய்தவர்களே.

ஆனால், அதில் ஒருவர், இறையச்சம் உடையவர். தன் பாவத்தையும், அதன் விளைவான சாபத்தையும் ஏற்றுக் கொண்டவர்.

இதனால் தான், அவர் பாவியாயிருந்தும், என்னோடு நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொண்டார்.

என் மகனே! என் மகளே!

எழுந்திரு, உன் பாவ போதை தெளியட்டும்.

அறிவுத் தெளிந்ததும், ஊதாரி மகன், எழுந்து தந்தையிடம் வந்தான்.

இன்னும் தாமதம் ஏன்? எழுந்து என்னண்டை வா!

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .