#


குருதி வடிந்த இயேசுவின் முகத்தை, வெறோணிக்காள் துடைக்கிறாள்.

பாடல் : -

களையற்ற முகத்தில் அந்தோ! முள்முடியின் குருதியைப் பார்!

அவர் முகம் பார்க்கிறவர், பிரகாசம் அடைந்திட

வெறோணிக்காள் துகிலாலே இரத்த முகம் துடைத்திட்டாள்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ, அவருக்கில்லை. நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை – எசா 53:2.

தியானம் :

அத்தனை நெருக்கடியிலும், ஒரு வீரப்பெண் வெறோணிக்காள், துணிந்து, இயேசுவிடம் வருகிறாள். அவருடைய இரத்தக்கறை படிந்த முகத்தை, தன் துண்டால் துடைக்கிறாள். இயேசுவின் மீது, அவளுக்கிருந்த அன்பையும், அசையாத மன உறுதியையும், இவ்வாறு வெளிப்படுத்தினாள். ஆண்டவருடைய துன்பத்தில் பங்கு கொண்டது மட்டுமல்லாமல், சுற்றிலும் சூழ்ந்து நின்ற அத்தனை கொலைஞர்களுக்கும், அவள் ஒரு விசுவாச வீராங்கனையானாள்.

வசனம் :

பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, கிறிஸ்துவும், ஒரே முறை, தம்மைத் தாமே, பலியாகக் கொடுத்தார் - எபி 9:28.

சிந்தனை:

என் மகனே! என் மகளே!

விசுவாசம் என்பது, என்னை உன் இரட்சகர் என்று, நீ வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளும் ஒரு மனவலிமை.

அன்றொரு நாள், எல்லாரும் என்னை, புதுமைகள் செய்கின்ற ஒரு நாசரேத்தூர் போதகர் என்று மட்டும், பின்பற்றிய வேளையில், பார்வையற்ற பார்த்திமேயு, நான், இரட்சகராகிய இயேசு என்றும், தாவீதின் குமாரன் என்றும், வெளிப்படையாக ஏற்று, என்னைப் பின்சென்றார்.

கூட்டத்தில், பலரும் அவரை அதட்டினார்கள்.

ஆனால் பார்த்திமேயு, இன்னும் அதிக உறுதியுடன், என்னை, எல்லாருக்கும் முன்பாக, இரட்சகர் என்று அறிக்கையிட்டு, பின்தொடர்ந்தார்.

இதுவல்லவா விசுவாசம்!.

இங்கே, உள்ளத்தின் விசுவாசம், வெளிப்படையாக அறிக்கையிடப்படுகின்றது.

என் மகனே! மகளே!

என்னுடைய பணியின் போது, ஆயிரக்கணக்கானோர், என் கையிலிருந்து, நன்மை உதவிகள் பெற்றுள்ளனர்.

ஆனால், அந்த உதவிக்காக மட்டும் என்னைப் பின்தொடர்ந்தவர்கள், என்னை வெளிப்படையாக, இரட்சகர் என்று ஏற்று, பின்பற்ற முன்வரவில்லை.

ஆனால் வெறோணிக்கா என்ற ஒரு பெண்மணி, துணிவுடன் முன்வந்து, என் கல்வாரியின் பாதையில், என்னை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார்.

என்னைப் புறக்கணிக்கும் மக்களின் மத்தியில், நீ என்னை, வெளிப்படையாக, இரட்;சகர் என்று ஏற்று, பின்பற்ற வேண்டும் என்று, இந்த தலம், உனக்குச் சொல்லித் தருகின்றது.

துன்பங்கள், நிந்தைகள், அவமானங்கள் மத்தியிலும், என்னை உன்னுடையவும், இந்த உலகத்தினுடையவும், இரட்சகர் என்று, வெளிப்படையாக அறிக்கையிட்டு, ஏற்றுக்கொள்ள, இப்போதே புறப்பட்டு வா!

கூச்சப்படாதே! பரிகாசங்களுக்கு அஞ்சாதே! பாடுகளை ஜெயங்கொண்டவர் உன்னோடிருப்பேன். என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு வா.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .