#


இயேசு தன் சிலுவையை சுமக்க, சீமோன் உதவி செய்கிறார்.

பாடல் : -

தள்ளாடும் இயேசு அந்தோ! பாரத்தினால் துடித்தார்

உதவி செய்ய சீரேன் சீமோனை அழைத்திட்டார்

இயேசு ஏற்ற சிலுவையை, தானும் ஏற்று சுமந்திட்டார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

மெய்யாகவே, அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களை சுமந்து கொண்டார் - எசா 53:4.

தியானம் :

பிலாத்துவின் தீர்ப்புப்படி, இயேசு கொல்கொத்தாவில், சிலுவையில் அறைந்து கொல்லப்பட வேண்டும். அவர் மிகுந்த களைப்போடு காணப்பட்டார். வழியில் ஒருவேளை அவர் சாகக்கூடும். இது காவலருக்கு பிரச்சனையை உண்டாக்கும். எனவே, சீரேனே ஊரானாகிய சீமோன் என்பவனை, இயேசுவின் சிலுவையை சுமக்கும்படி, காவலர்கள் கட்டாயப்படுத்தினர். சீமோன், கட்டாயத்தினால் சிலுவையை சுமந்தாலும், இயேசுவுக்கு அது மிகப்பெரும் இளைப்பாற்றியாகவே இருந்தது. இயேசுவின் பாடுகளில் பங்கு பெற்ற சீமோன், என்றும் நினைவு கூரப்படுகிறார்.

வசனம் :

நம் குற்றங்களுக்காக சாகுமாறு, கடவுள் இயேசுவை ஒப்புவித்தார் - உரோ 4:25.

சிந்தனை:

என் மகனே! என் மகளே!

பாவத்தின் சம்பளம், பாடுகளும் மரணமும்.

இந்த உலகம், தன் பாவங்களால், தனக்குச் சம்பாதித்துக் கொண்டதெல்லாம், பாடுகளும் மரணமுமே.

பாவமும், சாபமும், நிறைந்த இவ்வுலகில், நீ எப்படி வாழ வேண்டுமென்று, என் கல்வாரியின் பாதையில், நான் உனக்கு கற்றுத் தருகிறேன்.

இதோ! நீ துன்புறும் வேளையில், அன்போடிரு.

ஸ்னேகம் சகலமும் தாங்கும், ஸ்னேகம் சகலமும் சகிக்கும்.

பொறுமையோடும், தியாக உணர்வோடும், இருக்க கற்றுக்கொள்.

துன்புறுபவரின் துன்பங்களில், அவர்களைத் தாங்கிக் கொள்ளப் பழகு.

உன் துன்பங்களை மட்டுமே, எண்ணிக் கொண்டிராதே. உன்னைச் சுற்றியிருப்பவரின் துன்பங்களையும் நினைத்துப் பார்.

பிறரின் துன்பத்தைத் தீர்ப்பதற்கு, நீ வழி தேடும் போது, உன் துன்பத்தினின்று மீள, உனக்கு வழி பிறக்கும்.

சின்னஞ்சிறியவர்களாகிய இவர்களுக்கு, நீ செய்த போதெல்லாம், என் பிள்ளையே! அதை நீ எனக்கே செய்கிறாய்.

பிறரின் அன்றாட சிலுவையை, நீ சுமக்க முன்வரும் போது, உன்னுடையவும், உன் குடும்பத்தினுடையவும், அன்றாடச் சிலுவையை, தூக்கிச் சுமக்க, நான் உன்னுடன் வருவேன்.

என் மகனே! என் மகளே!

என் சிலுவையின் பாதையில், சீமோன் எனக்குச் செய்த உதவி, நீ பிறருக்குச் செய்ய வேண்டியதன் முன் அடையாளமே.

பிறர் துன்புறுவதைக் கண்டும், பாராமுகமாயிருக்கின்றாயோ! போதும், என் பிள்ளையே! போதும், எழுந்திரு, உன் உதவிக்கரம் நீட்டி, பிறரை துன்பத்தினின்று மீட்க வா!

என் மீட்பின் பணியில், நீயும் பங்குபெற வா!

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .