#


சிலுவையின் பாதையில், இயேசு தன் தாயை சந்திக்கிறார்.

பாடல் : -

வியாகுலத்தின் தாய் அந்தோ! வழியில் மகனைக் கண்டார்!

உலகத்தின் மீட்புக்காக ஒரே மகனைத் தந்த

உத்தமியின் இதயத்தில், வியாகுல வாள் குத்தியதே

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

அவரோ, நம் குற்றங்களுக்காக காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் - எசா 53:4.

தியானம் :

முப்பது ஆண்டுகள், சரீரத்தில் தூக்கி சுமந்த தாய், மூன்று ஆண்டுகள், மனத்திலும் ஆத்துமாவிலும் தூக்கி சுமந்த தாய், தன் மகன் சிலுவை சுமந்து வரும் சொல்லொண்ணாக் காட்சியைக் காண்கிறார். தன் தோளைத் தழுவி வளர்த்த மகனின் கரங்கள், சிலுவையை தழுவியிருந்தன. தன் முகத்தில் முகம் பதித்த இயேசுவின் திவ்ய முகம், இரத்தக்கறை படிந்திருந்தது.

வசனம் :

இரத்தம் சிந்தி, மனிதனுடைய பாவத்துக்கு கழுவாய் ஆகுமாறு, இயேசுவைக் கடவுள், நியமித்தார் - உரோ 3:28.

சிந்தனை:

என் மகனே!

என் அன்னை மரியாள், ஆவிக்குரிய அத்தனை அன்னையருக்கும் தாயானவள்.

தூய ஆவியாலும், வல்லமையாலும், என் அன்னை எவ்வளவு நிறைந்திருந்தார் என்றால், அவரது வாழ்த்தை எலிசபெத்து கேட்டவுடனே, எலிசபெத்தும், அவரது வயிற்றிலிருந்த குழந்தையும், பரிசுத்த ஆவியால் நிரப்பப் பெற்றார்கள்.

தந்தையின் விருப்பம் செய்வதில், நிறைவு கண்டு, என்னைக் கருத்தரித்து, உலகுக்கு ஈந்த தாயல்லவா அவர்.

என் மகனே! உன் பாவம் எனக்குத் தந்த சிலுவை, என்னை மட்டுமல்ல, என் தாயையும், என்னை அன்பு செய்கின்ற அத்தனை பேரையும் கூடத் துன்புறுத்தியதே.

நீ செய்கின்ற ஒரு சிறு தவறு கூட, அது யாருக்குச் செய்யப்பட்டதோ, அவரை மட்டுமல்ல, அவரை சார்ந்த அத்தனை பேரையும் துன்புறுத்துகிறதே.

பாவம் எவ்வளவு கொடியது பார்த்தாயா?

இதுவரையிலும், பாவம் செய்வதற்கு முந்திக்கொண்ட நீ, இனிமேல், அதற்கு பரிகாரம் செய்வதற்கு முந்த வேண்டும்.

என் மகனே! பாவம் பாடுகளை உற்பத்தி செய்கின்ற ஓர் இயந்திரம்.

நீ அசட்டையாகச் செய்யும் ஒவ்வொரு பாவமும், உனக்கும், உன் குடும்பத்துக்கும், நீ வாழும் சமுதாயத்துக்கும், பாடுகளை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும்.

பாடுகளால் பாவமும், பாவத்தால் பாடுகளும், என்ற சுழற்சியிலிருந்து, நீ மீள முடியாத நிலைக்கு, அதி சீக்கிரமாகவே தள்ளப்படுவாய்.

போதும்! உன் பாவ வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இன்றே என்னிடம் திருந்தி வா!

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .