#


இயேசு முதன் முறை கீழே விழுகின்றார்

பாடல் : -

முதன் முறை அந்தோ! இயேசு விழும் காட்சியைப் பார்!

விழுந்திட்ட உலகத்தை தூக்கிவிட வந்தவரை,

உலகத்தின் புழுதியில் புரண்டிட வைத்தனரே

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

இயேசுவின் தோற்றம், பெரிதும் உருக்குலைந்ததால், மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது, மானிடரின் உருவமே, அவருக்கு இல்லை – எசா 52:14.

தியானம் :

இரவெல்லாம் சித்திரவதைப்பட்ட இயேசு, மிகுந்த களைப்புற்றிருந்தார். தனியாக நடந்து செல்வதற்கு கூட, இயலாத நிலையிலிருந்த இயேசுவின் தோளில், சிலுவையை சுமத்தினர். பாரத்தை தாங்க முடியாத இயேசு, தரையிலே விழுகின்றார்.

வசனம் :

நாம் இறைப்பற்று இன்றி, வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும், கிறிஸ்து, நமக்காக, தம் உயிரைக் கொடுத்தார் - உரோ 5:6.

சிந்தனை:

என் மகனே! என் மகளே!

மனித குலத்தின் வீழ்ச்சி, ஏதேன் தோட்டத்தில் ஆரம்பமானது.

அந்த வீழ்ச்சியினின்று, எழும்ப முடியாத மனுக்குலத்தை, எழுப்பிவிட, நான் இவ்வுலகுக்கு வந்தேன்.

என் மகனே! உன்னை எழுப்பிவிட, நான் விழுந்து கிடக்கும் காட்சியைப் பார்!

இங்கே தான், ஊதாரி மகனின் மனமாற்றம் ஆரம்பமானது.

ஆனால் நீயோ, விழுந்த இடமே சுகம் என்று, அங்கேயே படுத்துக்கிடக்கின்றாயோ?

எழுந்திரு, என் மகனே! என் மகளே!

பன்றிக்குழியின் வாசம் உனக்கு பழக்கப் பட்டு போய்விட்டது.

துர்நாற்றத்துக்கும், நறுமணத்துக்கும் வேறுபாடு காண, உன்னால் முடியவில்லை.

ஆனால், உன்னை மீட்க வந்த என்னை வீழ்த்திய, உன்னுடைய வீழ்ச்சி, உன் மனக்கண்ணை திறக்கட்டும்.

உன்னை எந்நேரமும் மன்னித்து ஏற்றுக்கொள்ள காத்திருக்கும், தந்தை நான்.

பாவத்தில் விழுந்து கிடக்கும் உன்னால், “சாபம்” புற்றுநோய் போல், உன் குடும்பத்தையே அழித்துக் கொண்டிருக்கிறது.

போதும், உன் பாவ வாழ்க்கை. திரும்பு – உன் தந்தையின் இல்லம் நோக்கி.

அங்கே உனக்கும், உன் குடும்பத்துக்கும் மீட்பு காத்திருக்கிறது.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .