#


இயேசுவின் தோள் மேல் சிலுவை சுமத்துகிறார்கள்:

பாடல் : -

இயேசுவின் தோளில் அந்தோ! பாரச் சிலுவையைப் பார்!

காலொடிந்த குட்டி ஆட்டை சுமந்திட்ட தோள்களிலே

உலகத்தின் பாவத்தையும் சாபத்தையும் வைத்தனரே

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார். கொடியவருள் ஒருவராக கருதப்பட்டார். ஆயினும், பலரின் பாவத்தை சுமந்தார் - ஏசா 53:12.

தியானம் :

இயேசு தாமே சுமக்கும்படி, பார சிலுவையை அவர் மேல் சுமத்துகிறார்கள். மரத்தாலான அச்சிலுவையை அவரே சுமந்து சென்று, அதில் அவர் அறையப்பட்டு, மடிய வேண்டும். மனித குலத்தின் அக்கிரமங்கள் எல்லாம், அவர் தோள்மேல் சிலுவையின் வடிவில் சுமத்தப்படுகின்றன.

வசனம் :

சிலுவையின் மீது, தம் உடலில், நம் பாவங்களை, அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே அவர் இவ்வாறு செய்தார் - 1பேது 2:24.

சிந்தனை:

என் மகனே! என் மகளே!

நான் குற்றமற்றவன் என்று, மூன்று முறை கூறிய பிலாத்து, என்னை குற்றவாளி என்று தீர்ப்பிடுகின்றான் பார்.

உன் குற்றங்கள் அனைத்தையும், மன்னித்துப் போக்க வந்த, தேவ ஆட்டுக்குட்டியாம் என்னை, குற்றவாளி என்று தீர்ப்பிட்டாயே!

பாவம் எவ்வளவு கொடியது என்று பார்த்தாயா?

உன் பாவத்தையும், உன் பாரத்தையும் சுமந்து தீர்க்க வந்த என்மேல், சிலுவையை சுமத்துகிறாயோ?

ஆம்! நான் அதற்காகவே வந்தேன்.

என் மகனே! இந்தச் சிலுவை, வெறும் மரச்சிலுவை அல்ல.

இந்த சிலுவையில் தான், நான் உன் பாவங்களையும், அதனால் நீ அனுபவிக்கும் சாபங்களையும் சுமந்து செல்கிறேன்.

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் என் மகனே! என் மகளே!

உன் குடும்பத்தை, உன் பிள்ளைகளை, உன் தொழிலை, உன் எதிர்காலத்தை, காலமெல்லாம் சுமந்து செல்ல, நான் ஆவலோடு வந்தேன்.

உன்னைக் காலமெல்லாம் சுமந்து செல்லக் காத்திருக்கும், என்னண்டை வாரோயோ!

இவ்வுலகில், சுமைதாங்கி என நீ தேடிச் செல்லும் அனைத்தும், ஒரு நாள் பொய்த்துப் போகும்.

நானோ, நீ எந்த நிலையில் இருந்தாலும், உன்னைத் தூக்கிச் சுமக்க, காத்திருக்கும் தகப்பனல்லவா?

என் அழைப்பின் குரல் கேட்டு, உன் அன்றாடச் சிலுவையை, நாள்தோறும் சுமந்து, என் பின்னே வா!

உனக்கு இளைப்பாறுதல் தருவேன். இனி, என் சமூகம் உனக்கு முன்னால் செல்லும்.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .