#


இயேசு உயிர்த்தார்! இனி நாமும் உயிர்ப்போம்!!

பாடல் : -

இயேசு உயிர்த்தார்! - இனி நாமும் உயிர்ப்போம்!!

வசனம் :

கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே, நாம் கொண்டுள்ள விசுவாசம் - உரோ 6:8.

தியானம் :

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

இந்நேரம் வரை, கல்வாரியின் குரலைக் கேட்ட வண்ணம், சிலுவையின் பாதையை தியானித்தோம்.

“என் ஆடுகள், என் குரலைக் கேட்கும்” என்று, இயேசு கூறினார்.

இம்மட்டும் பேசிய இயேசுவின் குரலை, அவரது ஆடுகள் நிச்சயம் கேட்கும்.

என் ஆயன் அண்டவர், எனக்கு என்ன குறைவு? என்று கூறும் ஆட்டுக்குட்டி,

நிச்சயமாக, தம் ஆயனுடைய கல்வாரியின் சத்தத்தைப் புறக்கணியாது,

அந்த குரலுக்கு, மறுமொழி கொடுக்க, சங்கீதக்காரரின் வரிகளைக் கூறி, வருவோமா?

“இதோ வருகிறேன் ஆண்டவரே! இனி, உம் விருப்பப்படி நடப்பதே எனக்கு இன்பம்” .

இம்மட்டும், உலகம், பிசாசு, சரீரத்தின் விருப்பங்களுக்கு செவிசாய்த்து வாழ்ந்தோம்.

அதன் விளைவோ?

நம் வாழ்வைப் பற்றிக்கொண்ட, பாவமும் அதன் விளைவான சாபமும் அல்லவா?.

இனிமேல், இன்று ஒலித்த கல்வாரியின் குரலுக்கு செவிகொடுத்து வாழ்வோம்.

அதன் பயனோ, நித்திய மீட்பு.

வசனம் :

“உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்! ‘நான் உங்களுக்குள், உயிர்மூச்சு புகச் செய்வேன்! நீங்களும் உயிர் பெறுவீர்கள். நான் உங்களை, நரம்புகளால் தொடுப்பேன். உங்கள் மேல், சதையைப் பரப்புவேன்! உங்களைத் தோலால் மூடுவேன்! பின் உங்களுக்குள், உயிர்மூச்சு புகச்செய்வேன்! நீங்களும் உயிர்பெறுவீர்கள்” – எசே 37:4-6

சிந்தனை:

அன்பார்ந்தவர்களே!

எலும்புக் கூட்டமாக, எல்லா நம்பிக்கையும் இழந்து, கல்வாரியின் குரல் கேட்க வந்த நமக்கு, இதோ நம்பிக்கை உதிக்கிறது.

இந்த எலும்புக்கூட்டங்கள், நிச்சயம் உயிர்பெறும்!

இயேசு கல்வாரியில், பிதாவிடம் ஒப்புவித்த ஆவி, பெந்தக்கோஸ்து நாளன்று, காத்திருந்த சீடர்கள் மேல் இறங்கி வந்து, அவர்களை வேறு மனிதர் ஆக்கியது.

எலும்புக்கூட்டமாக, இயேசுவைப் பின்செல்ல தீர்மானித்த நம்மை, அதே ஜீவமூச்சு ஆட்கொள்ள, நம்மைத் தாழ்த்தி ஒப்புவிப்போம்.

நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும், பாவம் தொலைந்து போக, அதன் விளைவாக நம்மைத் துரத்திக் கொண்டிருக்கும் சாபங்கள் நீங்கிப் போக, துதி எனும் பலி செலுத்தி, தேவ பாதத்தில் சரணடைவோம். (ஸ்தோத்திர ஜெபம்)

நம் எல்லாப் பாவங்களையும், கல்வாரியில் இயேசு சிந்திய இரத்தம், இப்போதே கழுவிப் போக்கிவிடும்.

நம்மைப் பிடித்திருக்கும், அனைத்து சாபக்கட்டுகளும், விடுதலை அளிக்கும் தூய ஆவியால் இப்போதே விலகிப் போகும்.

என்னிடம் வருபவனை, நான் ஒருபோதும் தள்ளேன் என்றவர், நமக்கு முன், கல்வாரியில் கரம் விரித்து காத்திருக்கின்றார்.

நம் பாவங்களை ஆழ்கடலிலே எறிந்துப் போட,

நம் அக்கிரமங்களை காலால் மிதிக்க,

நம் குற்றங்களை, தம் முதுகுக்குப் பின்னாலே எறிந்து போட, உயிர்த்த இயேசு வருகின்றார்.

அவரை விசுவசித்து, ஏற்றுக்கொள்வோம்.

இனி, அவரோடு, அவருக்காக வாழ, தீர்மானித்து, நம்மையும், நம் குடும்பத்தையும் முழுமையாக, அவருடைய கல்வாரியின் காலடிக்கு ஒப்புவிப்போம்.

இதோ!நாம் ஆவலோடு எதிர்பார்க்கும் விடுதலை, நம்மை சந்திக்கிறது.

எலும்புக்கூட்டங்களான நம்மை, ஆவியானவர் ஆட்கொள்ள, நமக்கு புதுவாழ்வு கிடைக்கிறது.

உயிர்த்த இயேசுவோடு, ஒரு புதுவாழ்வு ஆரம்பமாகிறது.

நம் பாவங்களும், சாபங்களும், இயேசுவோடு கல்லறைக்குள் புதைக்கப்பட்டன.

நாமோ, ஜெயம் கொண்ட இயேசுவோடு, என்றென்றைக்கும், விடுதலை வாழ்வுக்கு கடந்து செல்கின்றோம். ஆமென்.

பாடல் : -

மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், முதல் முடிவற்றவரே!

பாவத்தினால் இறந்த என், வாழ்வினுக்கு ஜீவன் தர

பாவ சாபம், போக்கி என்னை மீட்டெடுக்க உயிர்த்தெழுந்தார்.

ஸ்தோத்றம் தேவா, ஸ்தோத்றம் தேவா

ஸ்தோத்றம் ஸ்தோத்றம் தேவா

ஹாலேலூயா ஹாலேலூயா ஹா…லேலூயா(2)