#


இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்:

பாடல் : -

கல்லறையில் அந்தோ! அடக்கிடும் காட்சியைப் பார்!

தன்னடக்கம், கட்டுப்பாடு இல்லாதவர் பாவம் போக்க

தானே அடக்கமாகி, கல்லறைக்குள் முடங்கிட்டார்.

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

வன்செயல் எதுவும், அவர் செய்ததில்லை, வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. ஆயினும், தீயவரிடையே அவருக்கு கல்லறை அமைத்தார்கள் - எசா 53:9.

தியானம் :

மண்ணையும் விண்ணையும் படைத்த மகா பரிசுத்தர், மண்ணுக்குள் புதைக்கப்படுகிறார். “அவர் தமக்குரிய இடத்துக்கு வந்தார். அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை”. தெய்வத்தைப் புறக்கணித்த மனிதனின் செயல்தான், இயேசுவின் அடக்கம்.

“கடவுள் வேண்டாம், கனி போதும்” என்று தொடங்கிய பாவம்,

“இயேசு வேண்டாம், பரபாஸ் போதும்” என்று உருவான பாவம்,

“தெய்வம் வேண்டாம், உலகம் போதும்” என்று இன்றும் தொடர்கிறது.

அந்த பாவ உலகம், தெய்வத்திற்கு அளித்த பரிசு “கல்லறை”. விளக்கை அணைத்து விட்டால், இருளை விரும்பும் பிராணிகளுக்கு கொண்டாட்டம். நல்லவரை அழித்து விட்டால், தீயவருக்கு குதூகலம். இயேசுவை அடக்கம் செய்தால், பிசாசின் மக்களுக்கு கூத்தாட்டம். ஆனால், தெய்வத்தை கல்லறை தாங்குமா? உயிரும் உயிர்ப்புமானவர், கல்லறையில் இருக்க முடியுமா?

வசனம் :

நாம் இனிமேல், பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு, பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு, அழிந்து போகும்” – உரோ 6:6.

சிந்தனை:

என் மகனே! என் மகளே!

பிலாத்து எனக்கு, அநியாயத் தீர்ப்பளித்த நேரத்திலிருந்து, என் உயிர் என்னை விட்டு பிரியும் நேரம் வரையிலும், என்னைச் சிலுவையில் சாகடிக்க, உதவி செய்து, உழைத்த அத்தனை பேரையும் நான் பார்க்கிறேன்.

என் மகனே! என் மகளே!

பாவ உலகம், பரிசுத்தவான்களை சகித்துக் கொள்ளாது.

அக்கிரமிகள், நீதிமான்களை பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.

பரிசுத்தரான எனக்கு, கல்லறை கட்டிவிட்டு, பாவிகள் இந்த உலகை ஆள ஆசிக்கிறார்கள்.

இறையாட்சியை நான் இந்த உலகுக்கு கொண்டுவந்தேன்.

ஆனால், இறையாட்சிக்கு கல்லறை கட்டி, அலகையின் ஆட்சியை வளர்க்கப் பார்க்கிறது, இந்தப் பாவ உலகம்.

தர்மம், நீதி, அன்பு, பரிசுத்தம், தியாகம், அனைத்துக்கும் கல்லறை கட்டி, அதர்மத்தையும், அநீதியையும், பகையையும், ஒழுக்கக்கேட்டையும், சுயநலத்தையும், வாழ வைக்கிறது, இந்தப் பாவ உலகம்.

என் மகனே! என் மகளே!

வா! இங்கே உன் மனமாற்றத்தை ஆரம்பி.

உன் பாவ வாழ்க்கைக்கு கல்லறை கட்டு.

எனக்குப் பிரியமில்லாத ஒரு வாழ்வுக்கு, நீ அடிமைப்பட்டிருக்கின்றாய்.

அந்த வாழ்க்கையை கல்லறைக்கு அனுப்பு.

பரிசுத்தம் உன்னில் வாழ, விசுவாசம் உன்னில் வாழ, அன்பும், கனிகளும், உன்னில் தொடர்ந்து வாழ,

உன் ஒழுக்கக்கேடான வாழ்வும், மாமிசத்தின் இச்சைகளுக்கு அடிமையான வாழ்வும், கல்லறைக்குச் செல்லட்டும்.

நான் கல்லறையிலிருந்து வெளியே வந்து, உன்னில் வாழ இடம் தா!

உன் பாவ வாழ்க்கையை கல்லறைக்கு அனுப்பி, கல்லறையில் இருக்கும் எனக்கு, உனக்குள் ஒரு வாழ்வைத் தா!

நான் பிறந்த போதே, எனக்கு மாட்டுத்தொழுவத்தைத் தந்து, உலக மாயை, பாவம் அனைத்துக்கும், நடுவீட்டில் இடம் தந்தது இந்த உலகம்.

உலக முடிவு மட்டும், உன் இதயத்திலும், இல்லத்திலும், வாழ வந்த எனக்கு, மீண்டும் கல்லறையைத்தான் தருகிறாயோ?

வேண்டாம் என் மகனே! வேண்டாம் என் மகளே!

அன்று அவர்கள் அறியாது செய்த பிழையை, நான் மன்னித்தேன்.

ஆனால், இன்று அதே பிழையை நீயும் செய்யாதே.

உன் இதயத்தில் என்னை வாழ விடு.

இனி, நீ என்னிலும், நான் உன்னிலும் வாழ, ஒரு புதுவாழ்வுக்கு இப்போதே கடந்து வா!.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .