#


அரிமத்தியா ஊர் யோசேப்பு, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்குகின்றார்:

பாடல் : -

சிலுவையில் இருந்தந்தோ! இறக்கிடும் காட்சியைப் பார்!

தீயவர்கள் சிலுவையில் அறைந்திடும் பணி செய்தார்

தூயவராம் யோசேப்பு இறக்கிடும் பணி செய்தார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

வாழ்வோர் உலகினின்று, அவர் அகற்றப்பட்டார். தம் மக்களின் குற்றத்தை முன்னிட்டு, அவர் கொலையுண்டார் - எசா 53:9.

தியானம் :

அரிமத்தியா ஊர் யோசேப்பு நல்லவர், நீதிமான். யூதரின் திட்டத்திற்கும் செயலுக்கும் இணங்காதவர். கடவுளுடைய அரசை, எதிர்பார்த்திருந்தவர். தலைமைச் சங்க உறுப்பினர். இவர், அதிகாரிகளின் உத்தரவு பெற்று, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கினார். இயேசுவின் நேசத்தாய் மரியாள், அங்கே இருந்தார். அவர் மடியில் இயேசுவை வைத்தார்கள். தாங்கொண்ணாத் துயரத்தில், மரியாள் இருந்தார். உன் இதயத்தையும் ஒரு வாள் ஊடுருவும் என்று முன்னறிவிக்கபட்;டவர், வியாகுலத் தாயாக அமர்ந்திருந்தார்.

கணவனை இழந்த மரியாள், தன் ஒரே மகனின் அடைக்கலத்தில் இருந்தவர், அந்த ஒரே மகனையே, பிதாவுக்குப் பலிப்பொருளாய் கையளித்தார். உலக மீட்புக்கான பிதாவின் திட்டத்தில், மரியாளுக்கும் உரிய பங்கு கிடைத்தது. ஆணிகள் பாய்ந்த பரிசுத்தக் கரங்கள், முள்முடி பாய்ந்த தேவமகனின் திருத்தலை, கொடிய ஈட்டி ஊடுருவிய தேவனின் திருவிலா, ஆணியால் குத்தி திறக்கப்பட்ட இறைமகனின் பொற்பாதங்கள், கண்கள் குளமாக, முத்தமாரி பொழிகின்றாள், அந்த தியாகத்தாய். தன்னை முழுவதுமே, தேவ சித்தத்துக்குக் கையளித்த அந்தத் தாய், தனக்கு மீதியிருந்த ஒரு மகனையே, பிதாவின் பலிபீத்துக்குக் கையளிக்கின்றார். உலக மீட்புக்கான, உன்னத பலி ஒன்று நடந்து முடிந்தது.

வசனம் :

இப்போது நாம், கிறிஸ்துவின் இரத்தத்தினால், கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆகி, அவர் வழியாய், தண்டனைத் தீர்ப்பிலிருந்து தப்பி, மீட்பு பெறுவோம் என, மிக உறுதியாய் விசுவசிக்கலாம் - உரோ 5:9.

சிந்தனை:

என் மகனே! என் மகளே!

பிலாத்து எனக்கு, அநியாயத் தீர்ப்பளித்த நேரத்திலிருந்து, என் உயிர் என்னை விட்டு பிரியும் நேரம் வரையிலும், என்னைச் சிலுவையில் சாகடிக்க, உதவி செய்து, உழைத்த அத்தனை பேரையும் நான் பார்க்கிறேன்.

பெத்லேகேமில், நான் பிறந்த நேரத்திலிருந்து, கல்வாரியில் என் உயிர் பிரியும் நேரம் வரையிலும், இரண்டு கூட்டம் மக்கள், என்னோடிருந்ததை நான் காண்கிறேன்.

என் பிறப்பைக் கண்டு, மகிழ்ச்சியடைந்த வானதூதர், ஆட்டிடையர், மூன்று ஞானிகள், ஒரு பக்கம்,

என் பிறப்பை எண்ணி, அச்சமுற்று கலங்கிய ஏரோதின் மக்கள் மறுபக்கம்.

என் உயிரைப் பாதுகாக்க, எகிப்துக்குத் தப்பியோடிய என் பெற்றோர் ஒருபக்கம், என் உயிரைப் பறிக்கத் தேடிய, ஏரோது அரசனும் படையும் மறுபக்கம்.

என் வார்த்தைகளைக் கேட்டு, என் சீடராக வந்த மக்கள் கூட்டம் ஒருபக்கம், என் மீது குறை காண வந்த, பரிசேயர் கூட்டம் மறுபக்கம்.

என் வாழ்வுதரும் வார்த்தையைக் கேட்டு, என்னோடு இருக்க வந்தவர்கள் ஒருபக்கம். என் வார்த்தைகள் தங்களுக்கு வசதியாக இல்லாத போது, என்னைப் புறக்கணித்து பின்வாங்கிப் போனவர்கள் மறுபக்கம்.

என்னிடத்தில் விடுதலையைப் பெற்று, எனக்குப் பின்னே வரவும், வாழவும், ஆயத்தமானவர்கள் ஒரு பக்கம், என்னிடம் அப்பம் உண்டு, புதுமைகள் பெற்று, அவர்கள் தேவைகள் சந்திக்கப்பட்டதும், என்னைவிட்டுப் போனவர்கள் மறுபக்கம்.

குழந்தை உள்ளத்தோடு, எனக்கு ஓசான்னா பாடி, என்னை வரவேற்றவர்கள் ஒரு பக்கம், குற்றம் நிறைந்த இதயத்தோடு, அவன் சாக வேண்டும், அவனை சிலுவையில் அறையும் என்று, கோஷம் போட்டவர்கள் மறுபக்கம்.

சாவதாயினும், உம்மைவிட்டுப் போகமாட்டோம் என்று, என்னைப் பற்றி நின்றவர்கள் ஒரு கூட்டம், எனக்கெதிராய் சதி செய்து, என்னை விலை பேசி, கொலை செய்யக் காத்திருந்தவர்கள் மறுபக்கம்.

இறுதியாக, என்னை சிலுவையில் அறைந்து, சாகடிக்கும் மக்கள் ஒரு பக்கம், என்னை சிலுவையினின்று இறக்க உழைக்கும் மக்கள் இன்னொரு பக்கம்.

என் மகனே! என் மகளே!

இதில், நீ எந்தப் பக்கம் நிற்கின்றாய்?

நான் செல்லும் பாதை இடுக்கமான பாதை, அந்த வழி செல்பவரும் சிலரே. ஆனால், அது வழ்வுக்குச் செல்லும் பாதை.

ஆனால், விசாலமான பாதை வழி செல்வோர் பலர். அந்த வழி, அழிவுக்குச் செல்லும் வழி.

மகனே! நீ எந்த வழியைத் தேர்ந்து கொண்டாய்?

வெறும் உலக ஆதாயங்களுக்காகவும், பெருமைக்காகவும், பிழைப்புக்காகவும் மட்டும், என்னைப் பின்பற்றுபவர்கள் கூட்டம், இன்று மிகப்பெரியது.

ஆனால், மீட்படைந்து, சத்தியங்களுக்குக் கட்டுப்பட்டு, அன்றாடச் சிலுவையை நாள்தோறும் சுமந்து, என்னைப் பின்பற்றும் விசுவாசிகள் கூட்டம், மிகச் சிறியதே.

என் மகனே! மகளே!

இதில் நீ எந்தக் கூட்டத்தில் இருக்கிறாய்?

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .