#


மனித குல மீட்புக்காக, இயேசு தன் உயிரை விடுகின்றார்:

பாடல் : -

சிலுவையில் இயேசு அந்தோ! உயிர்விடும் காட்சியைப் பார்!

மன்னிப்பீந்து, மீட்பைத் தந்து, இதோ உன் தாய், கைவிட்டீரே,

தாகம் முடிந்தது ஏழு வார்த்தை சொல்லி உயிர் விட்டார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

அவர் தம் உயிரை, நம் குற்ற நீக்கப் பலியாகத் தந்தார். எனவே, தம் வழிமரபு கண்டு, நீடு வாழ்வார். ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும் - எசா 53:10.

தியானம் :

இயேசுவை, நிர்வாணமாக சிலுவையில் தொங்கவிட்டனர். உலகத்தின் அத்தனை அவமானங்களும் ஒன்று சேர்ந்து, அவர்மேல் சாய்ந்து தொங்கியது. இவர் தெய்வ மகன், மெசியா என்று கூறி புகழ்ந்த மக்களுக்கு முன், நிர்வாணக் கோலத்தில், சிலுவையில் இயேசு தொங்கினார். உயிர் உடலைவிட்டுப் பிரிய, கடைசிப் போராட்டம் நடத்தியது. சிலுவையில் தொங்கி நிற்கும் ஒருவர், மூச்சை இழுத்து விடுவது தான், பிராண வேதனை. இந்த கொடுமையான மரணப்பாடு, பலமணி நேரம் நீடித்தது. அந்த மரணப் போராட்டத்திலும், தெய்வமகன், சாந்தத்தோடு தன் பணியை செய்து கொண்டிருந்தார்.

1. “அம்மா! இதோ உம் மகன்; யோவானே! - இதோ உன் தாய்” – யோவா 19:2.

2. “பிதாவே, இவர்களை மன்னியும்” – லூக் 23:43.

3. “இன்றே நீ என்னோடு, பரகதியில் இருப்பாய்” – லூக் 23:43.

4. “பிதாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்” – மாற் 15:34.

5. “தாகமாயிருக்கிறது” – யோவா 19:28.

6. “எல்லாம் முடிந்தது” – யோவா 19:28.

7. “பிதாவே! உம் கையில், என் ஆவியை ஒப்படைக்கிறேன் “ – லூக் 23:46.

என்ற, ஏழு இறுதி வாக்கியங்களைக் கூறி, இயேசு உயிர் துறந்தார்.

வசனம் :

வாழ்வோர், இனிமேல் தங்களுக்காக வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர் பெற்றவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே, அவர் அனைவருக்காகவும் இறந்தார்” – 2கொரி 5:15.

பாடல் : -

உன் கைகளால், நீ செய்த பாவங்கள்

என் கைகளை சிலுவையில் அறைந்ததோ!

உன் கால்களால் நீ செய்த பாவங்கள்,

என் கால்களை சிலுவையில் அறைந்ததோ!

உன் எண்ணத்தால் நீ செய்த பாவங்கள்,

என் தலையில் முள்முடி சூட்டியதோ!

உன் சீரழிந்த வாழ்வால், நீ செய்த பாவங்கள்,

என் ஜீவனைப் பறித்ததோ!

மகனே ! என் மகளே!

எனக்காக வாழ, என்னோடு வாழ,

உன் வாழ்வைத் தாராயோ!!!

சிந்தனை:

என் மகனே! என் மகளே!

ஆதியில், ஏதேன் தோட்டத்தில், என் ஜீவ மூச்சை ஊதி, உனக்கு ஜீவன் தந்தேன்.

அந்த ஜீவமூச்சை, உன் பாவத்தாலும், அதன் விளைவான சாபத்தாலும், நீ இழந்துவிட்டாய்.

கனிவும், இரக்கமும் கொண்ட நான், அதை மீண்டும் உனக்குத் தர, இப்ப+மிக்கு வந்தேன்.

நீயோ, என் ஜீவனைக் கல்வாரியில் பறித்துவிட்டாயே?

என் மகனே! நீ ஜீவன் பெற, இதோ மீண்டும் என் ஜீவனை, உனக்காக ஒப்புவிக்கிறேன்.

என்னில் விசுவாசம் கொண்டு, நித்திய ஜீவனை சொந்தமாக்கிக் கொள்.

பாடுகளாலும், வேதனையாலும், உழலும் என் பிள்ளையே! நீ உற்ற பாடுகள், உன் பாவத்தின் விளைவான சாபமல்லவா!

உன் பாவத்தையும், உற்ற சாபத்தையும், இதோ நான் கல்வாரியில் சுமந்து தீர்த்தேன்.

இதை நீ விசுவசிக்கின்றாயா?

நீ இன்னும் பாவியாக இருந்தபோதே, உனக்காக என் ஜீவனையும், கையளித்த நான், உனக்கு என்ன தான் செய்யமாட்டேன்?

என்னை விசுவசித்து ஏற்றுக்கொள்ளமாட்டாயா?

உன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, நீ அனுபவிக்க வேண்டிய தண்டனையை, நானே ஏற்றுக்கொண்டேனே.

என்னை ஏற்றுக்கொண்டு, எனக்காக வாழ, இன்னும் ஏன் தயக்கம்?

என் மகனே! மகளே!

உன் சிறு குற்றங்களைக் கூட பொறுத்துக் கொள்ள, முடியாதவர்கள் மத்தியில் நீ வாழ்கின்றாயே?

நான் உன்னை, உன் அனைத்து பெலவீனங்களோடும் ஏற்றுக்கொள்ள, இதோ கல்வாரியில் தொங்கி நிற்கின்றேன்.

என்னைக் கொலை செய்தவர்களையே மன்னித்த நான், உன்னையும் மன்னிக்க காத்திருக்கின்றேன்.

இனி, உன் வாழ்வில், இன்பமோ துன்பமோ, நன்மையோ தீமையோ, எதுவாக இருந்தாலும், என் கரம் பற்றி என்னைப் பின்செல்ல வா!

உனக்காகக் கையளித்த என் ஜீவன், உன்னை என்றென்றும், மகிழ்வோடு வாழ வைக்கும்.

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .