#


இயேசுவின் கை கால்களை, சிலுவை மரத்தோடு சேர்த்து அறைகின்றார்கள்:

பாடல் : -

கை கால்கள் இழுத்தந்தோ! அறைந்திடும் காட்சியைப் பார்!

ஆசீர் தந்த கரங்களை, தேடி வந்த கால்களை,

நிஷ்டூரமாய் இழுத்து மூன்றாணிகளில் அறைந்திட்டார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

நமக்கு நிறைவாழ்வை அளிக்க, அவர் தண்டிக்கப்பட்டார். அவர் தம் காயங்களால், நாம் குணமடைகின்றோம் - எசா 53:5.

தியானம் :

இயேசுவுக்கு உண்டான துன்பம், அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அதன் ஒரு நிகழ்ச்சியாக, சிலுவையில் அறைதல் நடைபெற்றது. சிலுவையில் அறையப்படும் ஆளின் அளவைப் பார்த்து, சிலுவை செய்யப்படுவதில்லை. எனவே, அறையப்படும் போது, சிலுவையின் அளவுக்குத் தகுந்தபடி, கைகால்களை இழுத்து நீட்ட வேண்டும். அதுவே கொடுமை. ஆனால், அதற்கு மேல், அணி அறைதல் நடந்தது.

உள்ளங்கைகளை மரத்திலே பதித்து வைத்து, பச்சை மரத்தில், ஆணி அடிப்பது போல், ஓங்கி அறைந்தார்கள். இரண்டு கால்களையும் பிணைத்து வைத்து, பாதங்களைத் துளைத்து, ஆணி அடித்தார்கள். ஆணிகளின் முனையை வளைக்க, இயேசுவின் உடலோடு சிலுவையை கவிழ்த்து வைத்து அடித்தார்கள். ஆக, இந்த கொடுமையான சம்பவம், இயேசுவை கொல்லாமல் கொன்றது. உடலிலிருந்து உயிர் பிரியும், பொல்லாத நேரத்தை நோக்கி, இந்தப் பாடுகள் தொடர்ந்தன.

வசனம் :

நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும், அவருடைய மகன், நமக்காக தம் உயிரைக் கொடுத்ததால், நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் - உரோ 5:10.

சிந்தனை:

என் பிள்ளையே! உன்னை மீட்க வந்த என்னை, நிற்வாண கோலமாக்கி, சிலுவையில் அறையும், கொடிய காட்சியைப் பார்.

உன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்த என் கை, கடலில் நீ மூழ்குகையில், உன்னைக் காப்பாற்றிய என் கை, அப்பம் பலுகச் செய்து, உனக்கு உணவு ஊட்டிய என் கை, உன் தொழுநோயைத் தொட்டு, சுகப்படுத்திய என் கை,

அந்தக் கையை, நீ சிலுவையில் அறைகின்றாயோ?

முப்பத்து எட்டு ஆண்டுகளாக, நோயுற்றுப் படுத்திருந்த உன்னை சுகமாக்க, தேடி வந்த என் கால்கள், இறந்து நான்கு நாட்களாகி, நாற்றமடித்த உன்னை உயிர்ப்பிக்க, கடந்து வந்த என் கால்கள், உனக்கு சத்தியத்தின் பாதையை எடுத்துச் செல்ல, வீதியெங்கும் நடந்து வந்த என் கால்கள்,

அந்தக் கால்கள் இரண்டையும் சேர்த்து, நீ சிலுவையில் ஆணிகளால் அறைகின்றாயோ?

ஆணியின் கூரை வளைக்க, என்னை கவிழ்த்துப்போட்டு, அடிக்கின்றாயே?

இன்னும் உன் பாவ மனம் மாறாதோ?

சித்திரவதை என்று கூறுவார்களே, அது இதுவல்லவோ?

என் மகனே! என் மகளே!

உனக்காக, நொறுக்கப்பட்ட அப்பமாக, நான் மண்ணில் புரள்வதைப் பார்.

இன்னும், நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?

உன் மேல் விழ வேண்டிய தண்டனை, எந்த அளவுக்கு என் மேல் விழுந்தது என்று பார்த்தாயா?

இன்னும் உன் மனம், என் பக்கமாகத் திரும்பாதோ?

பாவத்துக்குப் பணிவிடைச் செய்தது போதும், என் மகனே! மகளே! என்னண்டை வா!

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .