#


இயேசுவை, சிலுவையில் அறையும் முன், அவருடைய ஆடைகளை உரிகின்றார்கள்:

பாடல் : -

ஆடைகளை அந்தோ! உரிந்திடும் காட்சியைப் பார்!

மேலிருந்து கீழே வரை, தையலில்லா ஆடையது

மானபங்கம் செய்திடவே பலவந்தமாய் உரிந்தார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

ஆடுகளைப் போல், நாம் அனைவரும், வழிதவறி அலைந்தோம். நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம். ஆண்டவரோ, நம் அனைவரின் தீச்செயல்களையும், அவர் மேல் சுமத்தினார் - எசா 53:6.

தியானம் :

ஆடையோடு யாரையும் சிலுவையில் அறைவது இல்லை. அவ்வாறே, இயேசுவின் ஆடைகளையும் உரிந்தார்கள். இது, அவமானத்தின் உச்சிக்கே இயேசுவை இழுத்துச் சென்றது. இரத்தக் கறையால், உடலோடு ஒட்டியிருந்த ஆடை இது. உடலின் காயங்களோடு, ஆடைகள் ஒன்றித்திருந்தன. அதைக் கொடுமையாக இழுத்து உரிந்ததால், இயேசுவின் காயங்கள் புதுப்பிக்கப்பட்டன.

வசனம் :

தம் ஒரே மகன் மீது, விசுவாசம் கொள்ளும் எவரும் அழியாமல், நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு, கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்தார் - 1யோவா 3:16.

சிந்தனை:

என் அருமைப் பிள்ளையே!

ஏதேன் தோட்டத்தில், ஆதிப்பெற்றோர், பாவம் செய்த போது, அவர்கள் கண்கள் தங்கள் உடலை, நிர்வாணமாகக் கண்டன.

பாவத்தின் விளைவான, அந்த நிர்வாணத்தை மறைக்க, நான் ஆதிப் பெற்றோருக்கு ஆடை உடுத்தினேன்.

அங்கம் மறைப்பதால், பாவத்தைத் தூண்டும் இச்சைகளினின்று, நீ பாதுகாக்கப்படுகின்றாய்.

ஆனால் நீயோ! அங்கம் காட்டுவதற்காகவே, ஆடை உடுத்துகின்றாய்.

உன் உடலைக்காட்டி, பிறரை பாவத்துக்குத் தூண்டுகின்றாய்.

நீயும் பாவம் செய்து, பிறரும் பாவம் செய்ய, ஆடை அலங்காரத்தைப் பயன்படுத்துகின்றாய்.

இதுவும், அலகையின் தந்திரச் செயல்தானே?

இதற்கு நீ அடிமையாகி விடுகின்றாய்.

இதன் விளைவை, இன்று நீ நித்தம் பார்க்கின்றாய்.

இன்றைய கற்ப்பழிப்புக் கொலைகளுக்கெல்லாம், இதுவும் ஒரு காரணமல்லவா?

உன் அலங்கோல உடைகளால், பாவமும் சாபமும், பலுகிப் பெருகுகின்றன.

ஆதிப் பாவத்துக்கு காரணமான, ஏவாளின் தலைமுறையினர், இன்றும் அலகையின் கையிலிருந்து, பாவ உலகை ஆளுகின்றனர்.

உன் பாவத்துக்கு, என்மேல் வந்த தண்டனையைப் பார்த்தாயா?

பரிசுத்தரான என் ஆடையை உரிந்து, என்னை நிர்வாண கோலமாக்கி, சிலுவையில் தொங்கவிட்டனர்.

உன் அலங்கோல பாவத்துக்காக, நான் இவ்வளவும் அனுபவித்தது போதாதா?

என் மகனே! என் மகளே!

ஒழுக்கத்தையும், பரிசுத்தத்தையும் ஆடையாக அணிந்து, என் அவமானத்தை மறைக்க முன்வருவாயா?

பாடல் : -

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .