#

பீடத்தின் முன்

கிறிஸ்துவுக்குள் எனக்கு அன்பார்ந்தவர்களே!

இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள். ஏனெனில், வாழ்வுக்குச் செல்லும் வாயில் அது. அதன் வழி மிக குறுகலானது. இதைக் கண்டுபிடிப்போர் சிலரே” – மத் 7:13,14.

மனிதகுல மீட்புக்காக, இவ்வுலகுக்கு வந்த இயேசு, அம்மீட்பை மனிதன் பெற, அவர் தேர்ந்து கொண்ட வழியே, “சிலுவையின் பாதை”. இயேசு, சிலுவையின் பாதை வழியாகச் சென்று, மனிதனை அவன் பாவத்தினின்றும், அதன் விளைவான சாபத்தினின்றும் மீட்டார்.

இயேசு, கல்வாரியில் பெற்றுத் தந்த மீட்பை, நாமும் சொந்தமாக்க, நம்முடைய அன்றாட வாழ்வில் வரும், சிலுவையாகிய துன்பங்களை, நாம் மகிழ்ச்சியோடு சுமந்து, அவர் பின்னே செல்வோம்.

“கிறிஸ்து உங்களுக்காக துன்புற்று, ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள். இதற்காகவே அழைக்கப் பட்டிருக்கிறீர்கள்” – 1பேது 2:21.

கல்வாரியின் பாதையில், இயேசு நடந்து சென்ற அடிச்சுவடுகளைக் கண்டு, அவர் பாதம் ஒன்றி, நாமும் கடந்து செல்ல, மீட்பைச் சொந்தமாக்க, இந்த சிலுவையின் பாதையை தியானிப்போம்.

பாடல் : -

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.


இயேசுவுக்கு அநியாய தீர்ப்பிடுகிறார்கள்

நீதிமன்றத்தில் அந்தோ! இயேசு நிற்கும் காட்சியைப் பார்

குற்றமற்றவர் என்று மூன்று முறை கூறியவர்,

குற்றவாளி இவர் என்று, கொலை செய்ய தீர்ப்பிட்டார்

மன்னியும் தேவா என்னை மன்னியும் தேவா (3)

சிலுவை சுமந்து செல்லும் இயேசுவே!

என் பாவம் போக்க வந்தீர் - நான்

உம் தோளில் சிலுவை தந்தேன்.

வசனம் :

அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார். அவருக்கு நேர்ந்ததைப் பற்றி, அக்கரை கொண்டவர் யார் - ஏசா 53:8.

தியானம் :

இயேசுவின் மேல் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், எதுவும் எடுபடவில்லை. கடைசியில், “தன்னைக் கடவுளாகச் செல்கிறார்” என்று அவர் வாக்கு மூலத்திலிருந்தே அவரைக் குற்றம் சாட்டினர் “இவர் மீது நான் எந்த குற்றமும் காணேன்” என்று பிலாத்து மும்முறை கூறினார். “இவனை சிலுவையில் அறையுங்கள்” என்று இறுதி தீர்ப்பு வழங்கினார். சரித்திரத்தை கறைபடுத்திய இந்த விநோத தீர்ப்பு அன்று நடந்தது.

வசனம் :

உலகிற்கு தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே, கடவுள் இயேசுவை உலகிற்கு அனுப்பினார் - யோவா 3:17.

வசனம் :

என் மகனே! என் மகளே!

உன்னை விடுவிக்க வந்த எனக்கு நீ தீர்ப்பளித்தாயோ!

சற்று முன்பு எனக்கு ஓசான்னா பாடிய நீ, நான் சாக வேண்டும் என்று ஓலமிடுகின்றாயே!

உனக்கு பரபாஸ் வேண்டும்? நான் சாக வேண்டும்?

அக்கிரமி சாக வேண்டும் என்பதல்ல, அவன் மனம் மாறி, வாழ வேண்டும் என்பது என் விருப்பம்.

ஆனால், அக்கிரமி தன் அக்கிரமத்திலேயே வாழ வேண்டும், மீட்பராகிய நானோ, சாக வேண்டும் என்று நீ விரும்பினாய்.

என் மகனே! உன் வாழ்வில் எத்தனை முறை, பரபாசுக்கு வாழ்வும், மெசியாவுக்கு சாவும் என்று தீர்ப்பளித்திருக்கிறாய்.

பரபாஸ் என்றால் யார்?

கொலை, கொள்ளை, பகை, சண்டை, பழி, பொய், புரட்டு, ஏமாற்று என, அத்தனை பாவத்தினுடையவும் ஒட்டுமொத்த உருவமல்லவா?

ஆனால் நானோ?

அன்பு, அமைதி, பொறுமை, மகிழ்ச்சி, இரக்கம், தியாகம், பரிசுத்தம் இவை அனைத்துக்கும் பிறப்பிடம். உன் வாழ்வுக்கு நான் வேண்டாம், பரபாஸ் போதும் என்று, நீ பலமுறை முடிவு எடுத்ததன் பயன் என்ன?

பாடுகள், வேதனை, பயம், கலக்கம், போராட்டம், நோய், இழப்பு, மரணம், என இன்னும் எத்தனையோ இன்னல்கள் உன்னை துரத்திக்கொண்டேயிருக்கிறதே!

வா! என் மகனே! என் மகளே!

இப்பொழுதாவது மனம் மாறி என்னை ஏற்றுக் கொள்ள வா!

பரபாசோடு வாழ்ந்த வாழ்க்கைப் போதும், என்னோடு என்றும் வாழ, என் இல்லத்தில் உரிமை மகனாக, மகளாக வாழ்ந்து மகிழ, உன்னைக் கரம் நீட்டி அழைக்கிறேன்.

வருகிறேன் தந்தையே! திரும்பி நான் வருகிறேன்.

வருகிறேன் தந்தையே! திருந்தி நான் வருகிறேன் .