#


இயேசு முதன் முறை கீழே விழுகிறார்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

இரவெல்லாம் சித்திரவதைப்பட்ட இயேசு, மிகுந்த களைப்புற்றிருந்தார். தனியாக நடந்து செல்வற்கு கூட இயலாத நிலையிலிருந்த, இயேசுவின் தோளில், சிலுவையை சுமத்தினர். பாரத்தைத் தாங்க முடியாத இயேசு, தரையிலே விழுகின்றார்.

சிந்தனை:

இயேசுவே, என் பாவங்கள் எவ்வளவு கொடியது என்று, இந்த பரிசுத்த இடத்தில் நான் எண்ணிப் பார்க்கிறேன்.

ஒரு சின்ன பாவம் என்றாலும், நான் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் உணர்கிறேன்.

இயேசுவே, என் சிந்தனையாலே, என் சொல்லாலே, என் செயலாலே, நான் இழைத்த ஒவ்வொரு பாவங்களுக்காகவும் நீர் தரையிலே விழுந்தீர்.

ஐயா! எத்தனையோ முறை, பிறர் கீழே விழும் நிலைக்கு நான் காரணமாய் இருந்திருக்கிறேன்.

பிறர் சமாதானம் இழந்து, அவர்கள் கீழே விழ, பிறர் தங்கள் உரிமைகளை, உறவுகளை, நற்பெயரை இழந்து அவர்கள் கீழே விழ, நான் காரணமாயிருந்தேன்.

இனிமேல் பாவத்தின் மட்டில் நான் ஜாக்கிரதையாக இருப்பேன்.

மனிதன் பெலவீனன். வீழ்ச்சி என்பது அவனுக்கு சகஜம்.

ஆனால் வீழ்ந்த இடத்தில் படுத்து கிடப்பவன் பாவி. எழும்புவனோ பரிசுத்தன்.

இயேசுவே! என்னால் இனி யாரும், கீழே விழ நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று இந்த நேரம் தீர்மானிக்கிறேன்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு