#


இயேசு எருசலேம் மகளிருக்கு ஆறுதல் சொல்கிறார்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

இயேசுவின் பணியிலே, அவரோடு இணைந்து உழைத்தவர்களும், பணியில் பங்கு பெற்றவர்களுமாக, அனேக பெண்கள் இருந்தனர் - பெரும்பாலும் உள்ளவர்கள், அவரிடமிருந்து கிருபைகளைப் பெற்றுக் கொண்ட, உயர்குலப் பெண்கள். இயேசு யார் என்பதையும், அவர் எந்த அளவுக்கு பரிசுத்தர் என்பதையும், நன்கு உணர்ந்தவர்கள் அவர்கள். இயேசுவுக்கு உண்டான இந்த பெரும் துன்பத்தில் பங்கு கொள்ள, அவர்கள் குடும்பம் குடும்பமாக முன் வந்தனர்.

சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

என் பாவத்தையும், என் பாடுகளையும் சுமந்த, என் நேச இயேசுவே, நீர் எனக்கு தந்த பிள்ளைகள் உம்முடைய சொத்து என்பதை நான் உணரவில்லை.

அவர்கள் நீர் எனக்குத் தந்த கொடை என்பதை உணரவில்லை.

இந்த பிள்ளைகள் உமக்கு திருப்பி தரப்பட்ட வேண்டியவர்கள் என்பதையும் எண்ணாமல், அகந்தையோடு வாழ்ந்திருக்கிறேன் ஐயா.

என் பிள்ளைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் இருந்திருக்கிறேன்.

என்னுடைய கோபதாபங்களாலும், எரிச்சல்களாலும், பொறுமையின்மையாலும், பாவ அசுத்தங்களாலும், என் பிள்ளைகளுக்கு நான் துர்மாதிரியாய் இருந்திருக்கிறேன்.

ஆண்டவரே, அந்த பிஞ்சு உள்ளங்களை நான் காயப்படுத்தியிருக்கிறேன்.

அப்பா, அவர்கள் இன்று வளர்ந்து, அவர்களுடைய காயங்களும் வளர்ந்து தவிப்பதை உணர்கிறேன் சுவாமி.

என் பாவங்களை பொறுத்து, எனக்கு விடுதலை தாரும இயேசுவே.

சாபம் நீக்கும் இயேசுவே !

என் இனிய இயேசுவே! என் பிள்ளைகளை உம்முடைய பாதத்தில் கொண்டுவருகிறேன்.

என் பிள்ளைகளுக்காக அழ வேண்டும் என்று சொன்னீரே. அவர்கள் படிப்பதற்கான வசதிகளை நீர் நிறைய தந்தும், என் பிள்ளைகளுக்கு படிக்கும் ஞானம் இல்லை ஐயா.

என் பிள்ளைகளுக்கு நல்ல ஆகாரங்களை தந்தும், அவர்களுக்கு உடல் எழுந்தேறவில்லை ஐயா.

அருமை தகப்பனே! என் குடும்பங்களிலே, எத்தனையோ பிள்ளைகள், இன்னும் எதிர்கால நிச்சயம் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் சுவாமி.

என் உடன் பிறப்புக்கள், என் குடும்பத்தார் அனைவரையும் இந்த நேரம் நினைவு கூர்கிறேன். அவர்களுக்காக அழுது புலம்புகிறேன். விடுதலை தாரும் இயேசுவே.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு