#


இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

இயேசு மீண்டும் கீழே விழுகிறார். சிலுவையின் பாரம் அவரை அதிகமாக அழுத்தியது. மரச்சிலுவையின் பாரத்தைவிட, மனச்சிலுவையின் பாரம் அவருக்கு மிகுந்த களைப்பை உண்டாக்கியது. கசையடிகளால் உடலில் களைப்பு, ஆனால் செல்லும் வழியில் கிடைத்த வசைமொழிகளால் மனதில் களைப்பு, நிந்தை அவமானம் என்று, அனைத்து உபாதைகளும், அவர் சிலுவையின் அழுத்தத்தை அதிகரித்தது. இந்த மண்ணுலகை உண்டாக்கிய பரிசுத்தர் மண்ணோடு மண்ணாகப் புரள்கின்றார்.

சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

என்னுடைய பொறாமை, கவனக்குறைவு, சுயம், என் வாழ்க்கையில் உண்டாக்கிய விபரீதங்கள் பல. பிறருடைய வாழ்க்கையில், இனி எழும்ப முடியாத அளவுக்கு அவர்களுடைய பெயரை நான் கெடுத்திருக்கிறேன்.

ஒரு விளையாட்டாக நான் பேசிய சில காரியங்கள், எத்தனையோ பேருடைய உள்ளங்களில் காயத்தை உண்டாக்கி வாழ்க்கை பெரும் துன்பத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

பொறாமையினாலே, பிறர் பெயரை கெடுத்து, அவர்கள் இனி உலகை பார்க்க முடியாத அளவுக்கு, நான் துன்பப்படுத்தியிருக்கிறேன்.

இதெல்லாம் எவ்வளவு பெரிய பாவம் என்று, நான் உணராமலேயே இருந்தேன்.

இதனால் உண்டான பாவம், எனக்கும் என் ஆண்டவருக்கும் இடையே பெரும் தடைச்சுவராக நிற்கிறது என்பதை இப்போது உணர்கிறேன்.

பாவம் போக்கும் இயேசுவே!

பரிசுத்தரே, என் குடும்பத்தை கண்ணோக்கிப் பாரும்.

எத்தனை வீழ்ச்சிகள், எத்தனை தோல்விகள், எத்தனை ஏமாற்றங்களால் நொறுக்கப்பட்டிருக்கிறேன் சுவாமி.

என் பிள்ளைகளுடைய வாழ்க்கையில், விழுந்த இடத்திலிருந்து, அவர்கள் எழும்ப முடியவில்லை. ஆண்டவரே, என் கணவனின் தொழிலிலும் வீழ்ச்சி.

என் பாவம் போக்க, பாடு ஏற்றவரே, உம்முடைய பாடுகளாலும், மரணத்தாலும் எனக்கு விடுதலை தாரும் சுவாமி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு