#


இயேசுவின் முகத்தை வெறோணிக்கம்மாள் துடைக்கிறாள்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

அத்தனை நெருக்கடியிலும், ஒரு வீரப்பெண் வேறோணிக்காள், துணிந்து இயேசுவிடம் வருகிறாள். அவருடைய இரத்தக்கறை படிந்த முகத்தை, தன் துண்டால் துடைக்கிறாள். இயேசுவின் மீது அவளுக்கிருந்த அன்பையும், அசையாத மன உறுதியையும், இவ்வாறு வெளிப்படுத்தினாள். ஆண்டவருடைய துன்பத்தில் பங்கு கொண்டது மல்லாமல், சுற்றிலும் சூழ்ந்து நின்ற அத்தனை கொலைஞர்களுக்கும், அவள் ஒரு விசுவாச வீரங்கனையானாள்.

சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

இயேசுவே! வெட்கம், மானம், கௌரவம் என பலவிதமான மன உணர்வுகளால், நான் உந்தப்பட்டு, அகந்தைக்கு ஆளாயிருக்கிறேன்.

என் வாழ்வில் எனக்கு வரும் கஷ்டங்களும், பாடுகளும், பெரியது என்று என்னையே நினைத்து வாழ்ந்திருக்கிறேன்.

என் சொந்த மனைவி, என் சொந்த கணவன், என் பிள்ளைகள், என் தாய், என் தந்தை, போன்றோர், மனம் சோர்ந்து போய், என்னைப் பார்க்கும் போது, அதை நான் ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை.

கர்த்தாவே, என்னுடைய அகந்தையும், “நான்” என்ற என் செருக்கும், உம்முடைய நிறைவான ஆசீர்வாதம், என் குடும்பத்திற்கு வர தடையாய் இருப்பதை நான் உணர்கிறேன்.

இந்த பாவ கட்டிலிருந்து என்னை விடுவியும் ஐயா.

சாபம் நீக்கும் இயேசுவே !

தகப்பனே, ஒரு புறக்கணிக்கப்பட்ட உணர்வு, என் இதயத்தை வாட்டுகிறது.

ஒரு ஆறுதல் எனக்கு கிடைக்காதா என்று நான் ஏங்கி தவிக்கிறேன்.

என் உடன்பிறப்புக்களிடமிருந்து, என் பிள்ளைகளிடமிருந்து, என் பெற்றோரிடமிருந்து, என் கணவனிடமிருந்து, என் மனைவிடமிருந்து, ஒரு வார்த்தை, எனக்கு ஆறுதலாக கிடைக்காதா என்று தவிக்கிறேன் ஆண்டவரே.

என் மனதின் காயங்களை ஆற்றி என்னை விடுவியும் சுவாமி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு