#


இயேசுவுக்கு சீமோன் உதவி செய்கிறார்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

பிலாத்துவின் தீர்ப்புப்படி, இயேசு கொல்கத்தாவில், சிலுவையில் அறைந்து கொல்லப்பட வேண்டும். அவர் மிகுந்த களைப்போடு காணப்பட்டார். வழியில் ஒரு வேளை சாகக்கூடும். இது காவலருக்கு பிரச்சனையை உண்டாக்கும். எனவே, சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவனை, காவலர்கள் கட்டாயப்படுத்தினர். சீமோன், கட்டாயத்தினால் இயேசுவின் சிலுவையை சுமந்தாலும், இயேசுவுக்கு அது மிகப்பெரும் இளைப்பாற்றியாகவே இருந்தது. இயேசுவின் பாடுகளில் பங்கு பெற்ற சீமோன், என்றும் நினைவுகூரப்படுகிறார்.

சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

இயேசுவே, எனக்கு நிறைய சுயநலம் உண்டு. என்னுடைய சுயநலம் எவ்வளவுக்கு என்னை ஆட்டிப்படைக்கிறதென்றால், பிறர்நலத்தைப் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

என் சொந்த வீட்டில், என் கூட இருப்பவர்கள், எவ்வளவு வருத்தப்படுகிறார்கள் என்பதை என்னால் உணரவே முடியவில்லை.

என் பார்வை மங்கி போய் இருக்கிறது. நான் வேலை செய்கிற இடங்களில், நான் பயணம் செய்கிற பாதையில்,

பாரத்தால், மனசுமையால், கஷ்டங்களால், தளர்ந்து தள்ளாடுபவர்களைப் பார்த்து, ஒரு ஆறுதல் சொல்ல கூட எனக்கு மனமில்லாமல் போயிற்று.

இந்த என் சுயநலத்தால், நான் பாவம் செய்தேன். எனக்கு விடுதலை தாரும் சுவாமி.

சாபம் நீக்கும் இயேசுவே !

ஐயா, என்னுடைய பாரத்தை நான் சுமந்து செல்லும்போது நானுங்கூட ஆறுதல் இல்லாமல் தவிக்கிறேன்.

என் கூட இருப்பவர்கள் கூட, என்னுடைய கஷ்டங்களை பார்த்தும் பாராமுகமாய் இருப்பதை காண்கிறேன்.

அது எனக்கு இன்னும் துயரமாய் இருக்கிறது. அவர்கள் எனக்கு உதவி செய்ய மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு உண்டு சுவாமி.

என் குடும்பத்தில், என் தொழிலில், நான் தனிமைப் பட்டிருக்கிறேன் ஆண்டவரே. எனக்கு துணையாக வந்து என்னை விடுவியும் சுவாமி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு