#


இயேசு தன் தாயை சந்திக்கிறார்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

முப்பது ஆண்டுகள் சரீரத்தில் தூக்கி சுமந்த தாய், மூன்று ஆண்டுகள் மனத்திலும், ஆத்துமாவிலும் தூக்கி சுமந்த தாய், தன் மகன் சிலுவை சுமந்து வரும் சொல்லொண்ணா காட்சியைக் காண்கிறார். தன் தோளைத் தழுவி வளர்ந்த மகனின் கரங்கள், சிலுவையை தழுவியிருந்தன. தன் முகத்தில் முகம் பதித்த இயேசுவின் திவ்ய முகம், இரத்தக்கறைபடிந்திருந்தது.

சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

இயேசுவே! சின்ன பருவத்திலிருந்து இந்த நாள் வரை, என் பெற்றோரை எத்தனை முறை நான் துயரப்படுத்தியிருக்கிறேன், வருத்தப்படுத்தியிருக்கிறேன், அவமதித்திருக்கிறேன்.

நான் எதிர் பார்க்காதது, அவர்கள் எனக்கு செய்த போதெல்லாம், நான் எதிர்பார்த்தது, அவர்கள் எனக்கு செய்யாத போதெல்லாம், நான் அவர்களைத் துன்பப்படுத்தியுள்ளேன்.

ஒரு பெற்றோர் என்றால் யார், அவர்கள் பாரம் என்ன? அவர்கள் எவ்வளவு பெரியவர்கள். அவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள், என்பதெல்லாம் எண்ணாமல்,

என்னுடைய அகந்தையினாலும், சிறு பிள்ளை தனத்தினாலும், நான் அவர்களை துயரப்படுத்தி இருக்கிறேன்.

பாவம் போக்கும் இயேசுவே!

இயேசுவே! இன்று எனக்கும், என் குடும்பத்துக்கும், ஆசீர் கிடைக்க, இந்த பாவங்கள் எல்லாம் தடையாய் இருக்கின்றன. என்னை மன்னியும் இயேசுவே.

என் பெற்றோரின் மனக்காயங்களையும், துயரங்களையும், ஆற்றும். இன்று என்னை பெற்றெடுத்த பெற்றோருக்காக நான் ஜெபிக்கிறேன்.

அவர்கள் பசியாலும், பட்டினியாலும், தங்க வீடின்றியும், நோய் நொடிகளாலும். புறக்கணித்தலாலும், மனபாரங்களாலும், சோர்ந்து போய் இருக்கிறார்கள்.

நானும், ஒரு பெற்றோருக்குரிய கடமைகளைச் செய்ய முடியாமல் தவிக்கிறேன்.

சொல் கேளா பிள்ளைகளால், துயரப்படுகிறேன். அவர்களின் பாவ வாழ்க்கையால், அவமானப்படுகிறேன்.

என் பெற்றோருக்கு நான் செய்ததெல்லாம், இன்று எனக்கு செய்யப்படுகின்றன.

இந்த பரிசுத்த இடத்தில் உம்முடைய தாயை நீர் சந்திக்கும் போது எனக்கும் ஓர் விடுதலை தாரும் ஐயா.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு