#


இயேசு முதன் முறை கீழே விழுகிறார்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

இரவெல்லாம் சித்திரவதைப்பட்ட இயேசு, மிகுந்த களைப்புற்றிருந்தார். தனியாக நடந்து செல்வற்கு கூட இயலாத நிலையிலிருந்த, இயேசுவின் தோளில், சிலுவையை சுமத்தினர். பாரத்தைத் தாங்க முடியாத இயேசு, தரையிலே விழுகின்றார்.

சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

இயேசுவே! இது பாவம் என்று தெரிந்ததும், இனி இப்படி செய்யக்கூடாது என்று, நான் தீர்மானம் எடுக்கிறேன்.

ஆனால், பாவ சந்தர்ப்பங்களில் விழுந்து போகிறேன்.

நான் பாவ சுகத்தை எவ்வளவு அனுபவிக்கிறேன் என்றால், மனம் திரும்ப, காலம் தாழ்த்திக்கொண்டே இருக்கிறேன். விழுந்த இடத்திலேயே சுகம் காண்கிறேன்.

இயேசுவே! பாவம் எவ்வளவு கொடியது என்று இப்போது காண்கிறேன்.

எனக்கும் உமக்கும் இடையே, அது குறுக்கு சுவராக நிற்பதையும் உணர்கிறேன்.

எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆசீரை பெற தடையாக இருக்கின்ற, இந்த பாவம் இனி வேண்டாம் என்று பலமுறை தீர்மானம் எடுத்தும் மீண்டும் மீண்டும், அதே பாவத்தில் விழுந்து கிடக்கிறேன். என்னை மன்னித்து விடுவியும் ஆண்டவரே.

சாபம் நீக்கும் இயேசுவே !

இயேசுவே! என் குடும்பத்தில் வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சி.

தொழிலில் வீழ்ச்சி, முயற்சிகளில் வீழ்ச்சி, நம்பிக்கையில் வீழ்ச்சி.

என் துன்பத்தில், நான் விழுந்த இடத்திலிருந்து, எழும்ப முடியாமல் தவிக்கிறேன்.

பரிசுத்தரே, என் அன்றாட குடும்ப கடமைகளை, நான் செய்யும் போது, என்னால் தொடர்ந்து எதையும் செய்து முடிக்க போது மன பெலன் எனக்கு இல்லை.

என்னை தாங்கி தூக்கி விடும் இயேசுவே.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு