#


இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

மண்ணையும், விண்ணையும் படைத்த மகா பரிசுத்தர் மண்ணுக்குள் புதைக்கப்படுகிறார். “அவர் தமக்குரிய இடத்துக்கு வந்தார். அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை” தெய்வத்தை புறக்கணித்த மனிதனின் செயல்தான் இயேசுவின் அடக்கம்.

“கடவுள் வேண்டாம், கனி போதும்” என்று தொடங்கிய பாவம்,

“இயேசு வேண்டாம், பரபாஸ் போதும்” என்று உருவான பாவம்,

“தெய்வம் வேண்டாம், உலகம் போதும்” என்று இன்றும் தொடர்கிறது .

அந்த பாவ உலகம், தெய்வத்திற்கு அளித்த பரிசு, “கல்லறை”. விளக்கை அணைத்துவிட்டால், இருளை விரும்பும் பிராணிகளுக்குக் கொண்டாட்டம். நல்லவரை அழித்துவிட்டால் தீயவருக்கு குதூகலம். இயேசுவை அடக்கம் செய்தால், பிசாசின் மக்களுக்கு கூத்தாட்டம், ஆனால் தெய்வத்தை கல்லறை தாங்குமா? உயிரும் உயிர்ப்புமானவர் கல்லறையில் இருக்க முடியுமா?

சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

இயேசுவே! இரகசிய பாவங்கள், எனக்குள் கல்லறையாக இருந்து கொண்டிருக்கிறது.

இரகசிய பாவம் என்பது, வெளிப்படையில் மறைக்கப்பட்ட பாவமாக இருக்கலாம்.

ஆனால், உள் மனதிலே புதைந்திருந்து அது புழுத்து புழுவாகி, பெரும் மரண ஆபத்தை ஆத்துமாவுக்கு கொடுத்து கொண்டே இருக்கிறது.

நான் அதை பற்றியெல்லாம் அக்கரை கொண்டதேயில்லை.

வெளிப்படையாக, மக்கள் பார்க்கின்ற பாவங்கள் தான் நான் நீக்கப்பட வேண்டியது என்று என்னையே தேற்றியிருக்கிறேன்.

வாய்ப்பு கிடைக்காததால் நான் பாவம் செய்யாமலிருக்கிறேன்.

என்னுடைய மறைந்த உள்ளம் பாவத்தை தேடிக் கொண்டே இருக்கிறது.

என் இரகசிய பாவங்கள், என் சரீரத்தையும், என் ஆத்துமாவையும் ஒவ்வொரு நாளும் கொன்று கொண்டே இருக்கிறது.

இயேசுவே! என்னை முற்றும் அறிகிற கர்த்தாவே, நான் மறைத்தாலும், உமக்கு முன் மறைவானது ஒன்றுமில்லை ஐயா.

என் சின்ன பருவத்திலிருந்து இந்த நாள் வரை வானகத்துக்கு முன்பும், உமக்கு முன்பும், நான் மறைத்த என் பாவங்களை, இதோ வெளியே கொண்டு வருகிறேன்.

உம் இரத்தத்தால் தொட்டு, ஒரு கல்லறையின் ஜீவியத்திலிருந்து எனக்கு விடுதலை தாரும் சுவாமி.

சாபம் நீக்கும் இயேசுவே !

பரிசுத்தரே, என் ஏழை குடும்பத்தை ஒரு முறை பாரும். இனி நாங்கள் எழும்புவோமோ, என்று அச்சம் உண்டாகும் அளவுக்கு விழுந்து கிடக்கிறோம் ஐயா!

ஒரு கல்லறையின் அனுபவம் அது. இனி எங்களுக்கு மீட்பு இல்லை. இனி என் பிள்ளைகளுக்கு மீட்பு இல்லை. இனி என் வியாதியிலிருந்து மீட்பு இல்லை.

கடன் தொல்லையிலிருந்து மீட்பு இல்லை என்ற ஒரு கொடுமையான அச்சத்தை நான் என் வாழ்வில் அனுபவிக்கிறேன் சுவாமி.

ஒரு கல்லறையின் அனுபவம் அது. என் பிள்ளைகளை பார்க்க என் கண்கள் கூசுகின்றன. என் முன்னால் இருக்கின்றவற்றை காண என் கண்கள் அச்சப்படுகின்றன.

தனிமையை விரும்புகிறேன். யாரையும் பார்க்கும் மன துணிச்சல் எனக்கு இல்லை. ஒதுங்கி ஒதுங்கி, என் வாழ்க்கையை ஓரத்திற்கே கொண்டு போகிறேன்.

ஒரு கல்லறையின் அனுபவம் அது.

இயேசுவே, என்னையும், என் குடும்பத்தையும் பற்றி இருக்கின்ற, கொடிய கல்லறையின் அச்சுறுத்தலினின்று எங்களுக்கு விடுதலை தாரும் சுவாமி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு

இறுதி ஜெப வழிநடத்தல்


பிரியமானவர்களே!

இப்போது நாம், கல்வாரியில், இயேசுவின் சிலுவைப்பாதையை தியானித்து முடிக்கிறோம்.

அந்த சிலுவைப்பாதையின் பேறுபலன்கள், நம்மையும், நம் பிள்ளைகளையும் நம் குடும்பத்தையும் வந்து அடையும்படியாக ஜெபிப்போமா?நமக்காக சிலுவையில் மரித்த இயேசுவை உற்று பார்ப்போம்.

நமக்கு வாழ்வு தருவதற்காக வந்த இயேசு தம் ஜீவனை நமக்காக கையளித்தார்.

நம்மை நலமாக்கும் தண்டனை, அவர் மீது விழுந்தது.

நம் அக்கிரமங்களுக்காகவே, அவர் நொறுக்கப்பட்டார். நம் பாவங்களை கடவுள் அவர் மேல் சுமத்தினார்.

அவருக்கு உண்டான இந்த நிலையைப் பற்றி அக்கறைப்பட்டவன் யார்?

ஏசாயா 53 வேதனையோடு இக்கேள்வியை கேட்கிறது.நம் பாவங்களுக்கு பரிகார பலியாக பிதா இயேசுவை பலியாக்கினார்.

ஆடுகளை போல் நாம் வழி தவறி அலைந்தோம்.

அவர் நம் பாவங்களை தன் தோள் மேல் சுமந்தார்.

இயேசுவினுடைய சிலுவை பாடுகளும் மரணமும் நம்மை நம் பாடுகளின் மத்தியில் தங்குகிறது.

நம்முடைய பாவங்கள் அனைத்தும் அவர் தோளிலே சுமத்தப்பட்டன.

பரிசுத்தரான இயேசு பாவிகளாகிய நமக்காக சிலுவையிலே நொறுக்கப்பட்டார்.

நம்மை பரிசுத்தராக்குவதற்காக அவர் பாடுகளை ஏற்றுக்கொண்டார்.

அவருடைய மரணம் நமக்கு நிச்சயம் விடுதலை தரும்.

நமக்கு மட்டுமல்ல, நம்முடைய குடும்பம் முழுவதற்கும் விடுதலை கொடுக்கின்றது அவருடைய மரணம்.

நாம் அழிந்து போகாமல் இருக்க அவர் தம்மையே அழித்துக்கொண்டார்.இன்று இயேசு கல்வாரியில், அவருடைய ஆவியை நமக்காக கையளித்தார்.

நம்முடைய துன்பத்தில், நம்முடைய வேதனைகளில், நம்முடைய போராட்டங்களில், நமக்குத் துணையாக இருக்க, பாடுபட்டு மரித்த இயேசுவின் ஆவி, இப்போது நம்மீது பொழியப்படுகிறது.

அவர், நமக்காக வாக்களிக்கப்பட்டவர்.

இந்த உலகத்தின் போராட்டத்தில், போராடி ஜெயம் கொண்ட இயேசுவின் ஆவி, நம்மீது பொழியப்படுகிறது.

இப்போது அந்த ஆவியை, நாம் சொந்தமாக்கி கொள்வோம்.

கல்வாரியில் இயேசு நமக்காக கையளித்த ஆவியை நாம் சொந்தமாக்கி கொள்வோம்.அது பாடுகளை ஏற்றுக் கொண்ட ஆவி.

அது நம் பாவங்களை சுமந்து அழித்த ஆவி.

அது துன்பங்களையும், மரணத்தையும் ஜெயம் கொண்ட ஆவி.

அந்த ஆவியை நமக்கு சொந்தமாக்கி கொள்வோம்.

இயேசுவினுடைய ஆவிக்காக கேட்டு ஜெபிப்போம்.

இயேசுவே! என் இரட்சகரே! உம் ஆவியாலே என்னைத் தொடும் என்று கேட்போம்.

நம்மை விடுவிக்க, மீட்க வந்த இயேசுவின் ஆவி எங்குண்டோ அங்கே விடுதலை உண்டு.

நம்மை விடுவிக்க வந்த இயேசுவின் ஆவி எங்கே பொழியப்படுகின்றதோ, அங்கே விடுதலை உண்டு.நம் சரீரத்துக்கு விடுதலை தர, நம் மனக்கலக்கங்களுக்கு விடுதலை தர,

நம்முடைய பய சஞ்சலங்களிலிருந்து நமக்கு விடுதலை தர,

நம் பாடுகள் வேதனைகள் போராட்டங்களில் விடுதலை தர ,

இயேசு சுவாமி கல்வாரியில், தன் ஆவியை இன்று கையளித்தார்.

அந்த ஆவிக்காக அழுது ஜெபிப்போம்.

இயேசுவே அந்த ஆவியை என் மீது பொழியும் என்று கேட்டு ஜெபிப்போம்.

இயேசுவே உம்முடைய ஆவியாலே என்னை நிரப்பும் என்று மன்றாடுவோம்.அபிஷேகம் பெற்ற எனக்கருமையானவர்களே! கிறிஸ்துவின் ஆவி எங்குண்டோ அங்கே விடுதலை உண்டு என்று விசுவசிப்போம்.

அந்த அபிஷேகத்தின் ஆவியால் நாம் நிரப்பப்பட ,

நமக்காக கையளித்த இயேசுவின் ஜீவனாலே நாம் நிரப்பப்பட,

நாம் பாவத்தில் அழிந்து போகாமலிருக்க, நம்மை அவர் ஆட்கொள்ள, இப்போது ஸ்தோத்திரத்தோடு ஜெபிப்போமா.

ஸ்தோத்திர பலி எங்குண்டோ அங்கே ஆவியின் பொழிதலும் உண்டு.ஆவிக்காக அழுது ஜெபிப்போம்.

நம்மை குணமாக்குகின்ற இயேசுவின் ஆவி.

நம்மை விடுவிக்கின்ற இயேசுவின் ஆவி.

நம் காயங்களை ஆற்றுகின்ற இயேசுவின் ஆவி.

நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுகின்ற இயேசுவின் ஆவி.

நம் தளைகளை, கட்டுக்களை, தகர்த்தெறிகின்ற இயேசுவின் ஆவி.

அந்த ஆவி நம்மை ஆட்கொள்வதற்காக, ஸ்தோத்திர பலியோடு அவருடைய பாதத்துக்கு வருவோம்.

ஆதி அப்போஸ்தலர்கள் ஆலயத்தில் கூடியிருந்து, ஸ்தோத்திரபலி இட்டார்கள்.

அப்போது, இந்த உலகத்தை விடுவிக்கின்ற பரிசுத்த ஆவியானவர் மிகுந்த பெலனோடு அவர்களை ஆட்கொள்ள இறங்கி வந்தார்.

ஆமென்! இது விடுதலையின் நேரம்.

விடுதலை அளிக்கின்ற ஆவியானவர் நம்மை ஆட்கொள்கின்ற நேரம்.நன்றி இயேசுவே! உம்முடைய ஆவிக்காக நன்றி!

நீர் எங்களை விடுவிக்க, கையளித்த ஆவிக்காக நன்றி!

எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் குடும்பம் முழுவதையும், உம்முடைய ஆவி விடுவித்த அன்புக்காய் கோடி, கோடி நன்றி ஐயா!

துதி, கனம், மகிமை, உமக்கே செலுத்துகிறோம். இயேசுவின் நாமத்தில் நல்ல பிதாவே !

ஆமென்.