#


இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

இயேசுவுக்குண்டான துன்பம், அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அதன் ஒரு நிகழ்ச்சியாக, சிலுவையில் அறைதல் நடைபெற்றது. சிலுவையில் அறையப்படும் ஆளின் அளவைப் பார்த்து, சிலுவை செய்யப்படுவதில்லை. எனவே அறையப்படும் போது, சிலுவையின் அளவுக்குத் தகுந்தபடி, கைகால்களை இழுத்து நீட்ட வேண்டும். அதுவே கொடுமை. ஆனால் அதற்குமேல், ஆணி அறைதல் நடந்தது.

உள்ளங்கைகளை மரத்திலே பதித்து வைத்து, பச்சை மரத்தில், ஆணி அடிப்பது போல் ஓங்கி அறைந்தார்கள். இரண்டு கால்களையும் பிணைத்து வைத்து, பாதங்களைத் துளைத்து ஆணி அடித்தார்கள். ஆணிகளின் முனையை வளைக்க, இயேசுவின் உடலோடு சிலுவையை கவிழ்த்து வைத்து அடித்தார்கள். ஆக, இந்த கொடுமையான சம்பவம், இயேசுவை கொல்லாமல் கொன்றது. உடலிலிருந்து உயிர் பிரியும், பொல்லாத நேரத்தை நோக்கி, இந்தப் பாடுகள் நடந்தன.

சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

பிறரை காயப்படுத்துகின்றன என்னுடைய வார்த்தைகள், பிறரை காயப்படுத்துகின்றன என்னுடைய செயல்கள்.

எத்தனை முறை வேண்டுமென்றே செயல்களாலும், என் சொற்களாலும் பிறரை நான் கொடுமையாக காயப்படுத்தியிருக்கிறேன்.

வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், நான் பிறரை காயப்படுத்துவதில் அக்கரையோடிருந்தேன்.

என் உள்ளத்தின் “பழி” எவ்வளவு பெரியது என்றால், வாய்ப்பை உண்டாக்கி, என் பழி தீருமட்டும் நான் காயப்படுத்தியிருக்கிறேன்.

இயேசுவே, என்னுடைய வைராக்கியம், என்னுடைய பழிவாங்குதல்கள், எத்தனையோ பேரை சிலுவையில் அறைந்து வைத்திருக்கிறது.

இன்னும் அவர்கள் சிலுவையிலேயே தொங்கி நிற்கிறார்கள். என் பாவங்களைப் பொறுத்து, என்னை மன்னியும் தெய்வமே.

பாவம் போக்கும் இயேசுவே!

இயேசுவே, என் குடும்பத்தில், என் கணவனுக்கு தீராத வியாதி. என் மனைவிக்கு, என் பிள்ளைகளுக்கு, கொடிய வியாதிகள்.

கேன்சர், T.B, ஆஸ்மா, இதய நோய், சர்க்கரை வியாதி, என்று கொடும் வியாதிகளால் என்னுடைய குடும்பம் அலைக்கழிக்கப்படுகிறது.

சரீரத்தின் வலி தாங்க முடியாமல், தூங்காத இரவுகள்.

குடும்பத்தில் ஒப்பாரி சத்தம் ஓயாத என்வீடு, கண்ணீரும் கலக்கமும் நிறைந்த என் குடும்ப வாழ்வு.

இயேசுவே எனக்கு விடுதலை தாரும்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு