#

பீடத்தின் முன்

அன்பார்ந்தவர்களே!

இன்று நாம், கலந்துகொள்ளவிருக்கிற “சிலுவைப்பாதை ஆராதனை”, நம் பாவ – சாபங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆராதனை. நம் சொந்த பாவங்களும், நம் முன்னோரின் பாவங்களும், நமக்கும் நம் குடும்பத்துக்கும், பெரும் சாப மோசங்களைக் கொண்டு வந்துள்ளன. இந்த பாவ சாபத்தின் விளைவே, இயேசுவின் சிலுவைப்பாதை.

நம் அன்றாட சிலுவையை நாள்தோறும் சுமந்து, இயேசு சுமந்த பாவ சாபங்களில் நாமும் பங்கு பெற்று, இந்த ஆராதனையில் விசுவாசத்தோடு, பங்கெடுக்கும் போது, நம்முடைய பாவ சாபங்களிலிருந்து, நமக்கும் நிச்சயம் விடுதலை கிடைக்கும். ஆமென்.


இயேசுவுக்கு அநியாய தீர்ப்பிடுகிறார்கள்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

இயேசுவின் மேல் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், எதுவும் எடுபடவில்லை. கடைசியில், “தன்னைக் கடவுளாகச் செல்கிறார்” என்று அவர் வாக்கு மூலத்திலிருந்தே அவரைக் குற்றம் சாட்டினர் “இவர் மீது நான் எந்த குற்றமும் காணேன்” என்று பிலாத்து மும்முறை கூறினார். “இவனை சிலுவையில் அறையுங்கள்” என்று இறுதி தீர்ப்பு வழங்கினார். சரித்திரத்தை கறைபடுத்திய இந்த விநோத தீர்ப்பு அன்று நடந்தது.

சிந்தனை:

பாவம் போக்கும் இயேசுவே!

இயேசுவே! நான் அநியாயமாக பலரை தீர்ப்பிட்டு, குற்றம் சுமத்தி பாவம் செய்தேன்.

என் பொறாமையாலும், பழிவாங்கலாலும், அனேகர் மீது வீண் பழி சுமத்தியிருக்கிறேன்.

பிறர் செய்யும் சிறிய குற்றங்களையும், கை, கால், மூக்கு என்று வைத்து, அதை பெரிதுபடுத்தி, ஊரெல்லாம் பேசித் திரிந்திருக்கிறேன்.

எதிலும், பிறரை குற்றம் சாட்டுவதற்கு, நான் எப்போதும் முந்தியிருக்கிறேன்.

இந்த பாவங்களால், எனக்கும், என் குடும்பத்திற்கும் வர வேண்டிய ஆசீர்வாதம், தடைப்பட்டிருப்பதை உணர்கிறேன். என்னை மன்னித்து விடுவியும் ஐயா.

சாபம் நீக்கும் இயேசுவே !

இயேசுவே, என் குடும்ப பாரங்களை நான் சுமக்கும் போது, என்னை அநியாயமாக குற்றம் சாட்டுவோர் அனேகரைக் காண்கிறேன்.

நான் செய்யாத குற்றத்தை என் மீது சுமத்துகிறார்கள். நான் எடுக்காததை எடுத்ததாக சொல்கிறார்கள். நான் கொடுக்காததை, கொடுத்ததாக சொல்கிறார்கள்.

என் மனதின் துயரத்தால் நான் சோர்ந்து போகிறேன். என் உள்ளத்தின் துயரத்தை ஆற்றி, எனக்கு விடுதலை தாரும் இயேசுவே.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு