#


இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

மண்ணையும், விண்ணையும் படைத்த மகா பரிசுத்தர் மண்ணுக்குள் புதைக்கப்படுகிறார். “அவர் தமக்குரிய இடத்துக்கு வந்தார். அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை” தெய்வத்தை புறக்கணித்த மனிதனின் செயல்தான் இயேசுவின் அடக்கம்.

“கடவுள் வேண்டாம், கனி போதும்” என்று தொடங்கிய பாவம்,

“இயேசு வேண்டாம், பரபாஸ் போதும்” என்று உருவான பாவம்,

“தெய்வம் வேண்டாம், உலகம் போதும்” என்று இன்றும் தொடர்கிறது .

அந்த பாவ உலகம், தெய்வத்திற்கு அளித்த பரிசு, “கல்லறை”. விளக்கை அணைத்துவிட்டால், இருளை விரும்பும் பிராணிகளுக்குக் கொண்டாட்டம். நல்லவரை அழித்துவிட்டால் தீயவருக்கு குதூகலம். இயேசுவை அடக்கம் செய்தால், பிசாசின் மக்களுக்கு கூத்தாட்டம், ஆனால் தெய்வத்தை கல்லறை தாங்குமா? உயிரும் உயிர்ப்புமானவர் கல்லறையில் இருக்க முடியுமா?

சிந்தனை:

என் இயேசுவை, கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும்.

நான் என் செய்வேன்! நான் என்ன செய்ய வேண்டும்!

என் நேசரை கல்லறைக்கு அனுப்பிய, என் பாவத்தை நான் கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.

என் இயேசுவே! இரகசிய பாவங்கள், எனக்குள் பாவக் கல்லறையாக இருந்து கொண்டிருக்கிறது.

இரகசிய பாவம் என்பது, வெளிப்படையாக மறைக்கப்பட்ட பாவமாக இருக்கலாம்.

ஆனால், என் மனதில் புதைந்திருந்து.

அது புழுத்து புழுவாகி, பெரும் மரண ஆபத்தை என் ஆத்துமாவுக்கு கொடுத்து கொண்டே இருக்கிறது.

நான் அதைப் பற்றியெல்லாம் அக்கரை கொண்டதேயில்லை.

வெளிப்படையாக, மக்கள் பார்க்கின்ற பாவங்கள் தான்,

நீக்கப்பட வேண்டியது என்று நான் என்னையே தேற்றியிருக்கிறேன்.

வாய்ப்பு கிடைக்காததால், நான் பாவம் செய்யாமலிருக்கிறேன்.

என்னுடைய மறைந்த உள்ளம் பாவத்தை தேடிக் கொண்டே இருக்கிறது.

என் இரகசியப் பாவங்கள், என் சரீரத்தையும் என் ஆத்துமாவையும், ஒவ்வொரு நாளும் கொன்று கொண்டே இருக்கிறது.

இயேசுவே! என்னை முற்றும் அறிகிற கர்த்தாவே,

நான் மறைத்தாலும், உமக்கு முன் மறைவானது ஒன்றுமில்லை ஐயா.

என் சின்ன பருவத்திலிருந்து, இந்த நாள் வரை, வானகத்துக்கு முன்பும், உமக்கு முன்பும்,

நான் மறைத்த என் பாவங்களை, இதோ வெளியே கொண்டு வருகிறேன்.

என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்.

என் பாவங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும்.

என் மாமிசத்தையும், என் சுயத்தையும், அதில் அடங்கிய அனைத்துத் தீமைகளையும் நான் மண்ணுக்குள் அடக்கம் செய்கிறேன். தன்னடக்கம் கட்டுப்பாடோடு,

இந்த 40 நாள் நோன்பில், நான் எனக்குள் இருக்கும் தீமைகள் அனைத்தையும் அடக்கம் செய்வேன்.

என் நேசரை நான் கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வருவேன். அங்கே நான் அடக்கம் ஆவேன்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு

இறுதி ஜெபம்


என் இனிய இயேசுவே! என் பாவங்களால் நொறுக்கப்பட்டு, கல்வாரியில் தொங்கி உயிர்விட்ட இயேசுவே!, என் பாவங்கள், என்னை மீட்க வந்த நேசரை, சிலுவையில் அறைந்து கொன்றது, என்பதை எண்ணும் போது, நான் மிகுந்த துயரப்படுகிறேன். ஏன் பாவம், “கடவுளையே” கொன்றது என்றால், அது “என்னை” விட்டு வைக்குமா என்பதை, எண்ணிப் பார்க்கிறேன்.

இனி என் வாழ்வு, மீண்டும் ஒரு முறை என் இயேசுவை, சிலுவையில் அறைய பாவம் செய்யாது. இதில் நான் எச்சரிக்கையாக இருப்பேன். இயேசுவே! ஒவ்வொரு முறையும், உம்முடைய பரிசுத்த காயங்களையும், நீர் சிலுவையில் தொங்கி நிற்கும் காட்சிகளையும் நான் பார்க்கும் போது, என்னில் குடிகொள்ளும் பாவத்தை, நான் அடியோடு வெறுக்கிறேன்.

“ஒருமுறை, ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையை சுவைத்தவர்கள், நெறிபிறழ்ந்து விடின், இவர்கள் தாங்களே, இறைமகனை சிலுவையில் அறைகிறார்கள்” – எபி 6:4-6, என்று சொன்ன இயேசுவே, இந்த காரியத்தை, நான் என் வாழ்க்கையில், எப்போதும் செய்ய மாட்டேன் என்று, இப்போது தீர்மானம் எடுக்கிறேன். ஆமென்.