#


இயேசுவை இறக்கி, தாயார் மடியில் வைக்கிறார்கள்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

அரிமத்தியா ஊர் சூசை நல்லவர், நீதிமான், யூதரின் திட்டத்திற்கும் செயலுக்கும் இணங்காதவர். கடவுளுடைய அரசை எதிர்பார்த்திருந்தார். தலைமைச் சங்க உறுப்பினர் இவர், அதிகாரிகளின் உத்தரவு பெற்று, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கினார். இயேசுவின் நேசத்தாய் மரியாள், அங்கே இருந்தார். அவர் மடியில் இயேசுவை வைத்தார்கள் தாங்கொண்ணா துயரத்தில், மரியாள் இருந்தார். உன் இதயத்தையும் ஒரு வாள் ஊடுருவும், என்று முன்னறிவிக்கப்பட்டவர். வியாகுலத்தாயாக அமர்ந்திருந்தார்.

கணவனை இழந்த மரியாள், தன் ஒரே மகனின் அடைக்கலத்தில் இருந்தவர் . அந்த ஒரே மகனையே பிதாவுக்கு பலிப்பொருளாய் கையளித்தார். உலக மீட்புக்கான பிதாவின் திட்டத்தில், மரியாளுக்கும் உரிய பங்கு கிடைத்தது. ஆணிகள் பதிந்த பரிசுத்தக் கரங்கள், முள்முடி பாய்ந்த தேவமகனின் திருத்தலை, கொடிய ஈட்டி ஊடுருவிய தேவனின் திருவிலா, ஆணியால் குத்தித் திறக்கப்பட்ட, இறைமகனின் பொற்பாதங்கள், கண்கள் குளமாக, முத்தமாரி பொழிகின்றாள், அந்த வீரத்தாய். தன்னை முழுவதுமே, தேவ சித்தத்துக்குக் கையளித்த அந்தத்தாய், தனக்கு மீதியிருந்த ஒரு மகனையே, பிதாவின் பலி பீடத்துக்கு கையளிக்கிறார். உலக மீட்புக்கான உன்னத பலி ஒன்று நடந்து முடிந்தது.

சிந்தனை:

நான் பாவம் செய்ததும், என் ஆத்துமா சாகிறது.

ஆனால் என் சரீரமோ வாழ்கிறது.

ஆத்துமா செத்த பின், மீண்டும் சரீரம் வாழ, கடவுள் இரக்கம் கொண்டது எதற்காக.

நான், பாவப் பரிகாரம் செய்வதற்காக.

பாவம் செய்ய, நான் உனக்கென்று ஒரு காலத்தை உண்டாக்கினேன்.

பாவத்திற்கு பரிகாரம் செய்ய உனக்கென்று, கடவுள் ஒரு காலத்தை தருகிறார்.

காலம் பொன் போன்றது.

அந்த காலத்தை, இயேசுவை சிலுவையில் அறைந்ததால் நான் கறைப்படுத்தினேன்.

எனக்கு கடவுள் தந்த, என் எஞ்சிய காலத்தை, என் பாவக் கறையை கழுவும் படியாக, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்க இதோ வருகிறேன்.

என் சிந்தனையாலே, என் சொல்லாலே, என் செயலாலே, என் ஆத்மீக கடமைகளைச் செய்ய தவறியதாலே, பலமுறை உம்மை நான் சிலுவையில் அறைந்தேன் இயேசுவே!

இனி உம்மை சிலுவையிலிருந்து இறக்குவதிலேயே நான் கவனமாக இருப்பேன். பிறருக்காக பலியாவதிலும், பிறருடைய சுமையை இறக்குவதிலும் நான் ஆர்வமாக இருப்பேன்.

காலத்தை பரிசுத்தப்படுத்துவேன்.

எனது பெரிய குற்றங்களை பற்றி எண்ணாமல், பிறருடைய சிறிய குற்றங்களை கூடப் பெரிதுபடுத்தியிருக்கிறேன்.

என் பாவங்களை மறைக்க, பிறர் குற்றங்களை பேசி தீர்த்தேன்.

என் குற்றங்களை யாராவது சுட்டிக்காட்டும் போது நான் எவ்வளவு விசனப்பட்டிருக்கிறேன்.

என் “சுயநலம்” கொடியது.

எனக்கு குற்றம் செய்ய உரிமை உண்டு. ஆனால் அதை சுட்டிக்காட்ட, யாருக்கும் உரிமை இல்லை என்றேன்.

என் “சுயம்” கொடியது. அது என் நேசருக்கு சாவுத் தீர்ப்பு அளித்தது.

ஆண்டவரே! இந்த பாவங்களினால், எனக்கும், என் குடும்பத்துக்கும் வரவேண்டிய ஆசீர்வாதங்கள், தடைப்பட்டிருப்பதை நான் உணர்கிறேன்.

இனிமேல் ஒருபோதும் என் நாவு பிறருக்கு தீர்ப்பிடாது என்று உறுதியான தீர்மானம் எடுக்கிறேன்.

என் ஜெபத்தை கேட்டு, என்னை பொறுத்துக் கொள்ளும் சுவாமி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு