#


இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

இயேசுவை நிர்வாணமாக சிலுவையில் தொங்கவிட்டனர். உலகத்தின் அத்தனை அவமானங்களும் ஒன்று சேர்த்து அவர்மேல் சாய்ந்து தொங்கியது. இவர் தெய்வ மகன், மெசியா என்று கூறிப் புகழ்ந்த மக்களுக்கு முன், நிர்வாணக் கோலத்தில் சிலுவையில் தொங்கினார். உயிர் உடலைவிட்டுப் பிரிய, கடைசிப் போராட்டம் நடத்தியது. சிலுவையில் தொங்கி நிற்கும் ஒருவர், மூச்சை இழுத்து விடுவது தான் பிராண வேதனை. இந்த கொடுமையான மரணப்பாடு பலமணி நேரங்கள் நீடித்தன. அந்த மரணப் போராட்டத்திலும், தெய்வமகன் தன்பணியை சாந்தத்தோடு செய்து கொண்டிருந்தார்.

“அம்மா, இதோ உம் மகன்; யோவான், இதோ உன்தாய்,” யோவா 19:2.

“பிதாவே இவர்களை மன்னியும்.” லூக் - 23:43.

“இன்றே நீ என்னோடு பரகதியில் இருப்பாய்.” லூக் - 23:43.

“பிதாவே, ஏன் என்னைக் கை விட்டீர்,” மாற் - 15: 34.

“தாகமாயிருக்கிறது.” யோவா 19 : 28.

“எல்லாம் முடிந்தது,”; யோவா 19 : 28.

“பிதாவே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்.” லூக் - 23:46 என்று கூறி இயேசு உயிர் துறந்தார்.

சிந்தனை:

இயேசுவே! நான் பாவத்தை பற்றிய அச்சமே இல்லாமல் வாழ்கிறேன்.

பாவம் எவ்வளவோ கொடியது. அது என் தெய்வத்தை நேரடியாக தாக்குகின்ற சக்தி கொண்டது.

என் தெய்வத்துக்கும் எனக்கும் இடையே உறவை அறுத்துப் போடும் சக்தியுடையது.

இதை நான் உணராமலேயே வாழ்ந்தேன்.

என் பேச்சுக்களால், கடுமையானப் பாவங்களைக் கட்டி கொண்டேன்.

என் எண்ணங்களால், கொடிய பாவங்களை கட்டி கொண்டேன். என் செயல்களாலும் அவ்வாறே…

அப்பா நான் பரிசுத்தமான இதயத்தோடு, உம்மைச் சுற்றி வலம் வந்த என் கடந்த காலத்தை நினைக்கிறேன்.

இன்று பரிசுத்தம் இழந்து, புனிதம் இழந்து, ஆத்துமா செத்துப்போக, உம் காலடியில் வந்து நிற்கிறேன்.

உம் பாடுகளாலும், மரணத்தாலும், எனக்கு விடுதலை தாரும்.

என்னில் “நான்” என்ற அகந்தை சாக வேண்டும்.

இயேசு என்னில் வாழ, என் “சுயம்” சாக வேண்டும்,

என்னில் மாமிசத்துக்கு அடுத்தவை, உலகுக்கு அடுத்தவை சாக வேண்டும்.

“இனி வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கிறார்” , என நான் சொல்ல வேண்டும்.

இயேசுவே நீர் சாக வந்தவர் அல்ல வாழ வந்தவர்.

என் மனதில், என் சரீரத்தில், என் ஆத்மாவில், நீர் வாழ வேண்டும்.

இதோ வருகிறேன் ஆண்டவரே, நான் செத்து உமக்கு ஜீவன் தர இதோ வருகிறேன்.

என் சரீரத்தை நீர் சுதந்தரித்து கொள்ளும். அது இனி உமக்கு சொந்தம்;

என் மனத்தை தாழ்த்தி தருகிறேன். அதை எடுத்து கொள்ளும்.

இயேசுவே! அங்கே வாழ நீர் வர வேண்டும், அது இனி உமக்கே சொந்தம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு