#


இயேசுவின் ஆடைகள் உரியப்படுகின்றன

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

ஆடையோடு யாரையும் சிலுவையில் அறைவது இல்லை. அவ்வாறே இயேசுவின் ஆடைகளை உரிந்தார்கள். இது அவமானத்தின் உச்சிக்கே அவரை அழைத்துச் சென்றது. இரத்தக் கறையால் உடலோடு ஒட்டியிருந்த ஆடை இது. உடலின் காயங்களோடு, ஆடைகள் ஒன்றித்திருந்தன. அதை நிஷ்டூரமாக இழுத்து உரித்ததால், இயேசுவின் காயங்கள் புதுப்பிக்கப்பட்டன.

சிந்தனை:

இயேசுவே! ஆடைகள், மானம் காக்க, மனுக்குலத்துக்கு நீர் கொடுத்த, ஒரு பெரிய கொடை.

ஏதேன் தோட்டத்தில், நான் நிர்வாணமாய் நின்றதை கண்ட இயேசுவை, என் உடலை மறைக்க, நீர் எனக்கு பரிசாக தந்த ஆடைகளையே,

நான் எனது உடலின் அலங்காரத்திற்காகவும், பாவ இச்சைகளுக்காகவும் உடுத்தி பாவம் செய்தேன்.

ஆடை அலங்காரத்திற்கானது என்று நினைத்து அகந்தை கொண்டேன். ஆடையால் அனேகரை பாவத்துக்கு உள்ளாக்கினேன்.

அப்பா எனக்கு தந்த ஆடையை, என் பரிசுத்தத்தில் நான் வளர பயன்படுத்துவதை விட்டு,

பாவ ஆசைகளுக்கு மக்களை இட்டு செல்லும் கவர்ச்சிக்கு, என் ஆடைகளை பயன்படுத்தியிருக்கிறேன்.

அப்படியே என் பிள்ளைகளையும் உடுத்தி, பாவம் செய்கிறேன்.

என் ஆடையினால் நான் மாசுபடிந்து அழுக்கடைந்தேன். என்னை மன்னியும்.

இயேசுவே, மானம் காக்க நீர் தந்த ஆடைகளை களைந்து, பலரை அவமானப்படுத்தியிருக்கிறேன்.

பிறரை அவமானப்படுத்துதல் எவ்வளவு கொடியது என்பதை உணராமலேயே, அதை செய்திருக்கிறேன்.

என் மானம் காக்க வந்த நீர், என் அவமான பாவத்தால், இன்று அவமானப்பட்டீர்.

ஒரு காலத்தில் நீங்கள் உங்கள் உடலின் உறுப்புகளை, பாவத்துக்கு கையளித்தீர்கள்.

இப்போதோ, அந்த உறுப்புகளை பரிசுத்தத்துக்கும், மீட்புக்கும் கையளியுங்கள். என்று எங்களுக்கு சொன்னவரே,

அதற்குப் பதிலாக உம்முடைய சரீரத்தை நான் ஒரு அவமான சின்னமாக மாற்றிய, இந்த இடத்தை நினைத்து நான் அழுகிறேன்.

இந்த உலகத்தில், நீர் எனக்கு தந்த சரீரத்தை, பாவத்திற்கு அல்ல,

மீட்புக்கு பயன்படுத்த வேண்டும் என்று, நீர் எனக்கு சொல்லித் தருகிறீர்.

என் உடலின் ஒவ்வொரு உறுப்புக்களாலும், நான் கட்டிக் கொண்ட பாவங்கள், என் நேசரை அவமானமாக நிறுத்தியது, என்று ஏற்று கொள்கிறேன்.

கர்த்தாவே என்னை பொறுத்து கொள்ளும்; இனி என் உடலின் உறுப்புகளை உமக்கு மகிமை உண்டாக்கும் படியாகவும்,

என் சொந்த மீட்புக்காகவும் பயன்படுத்துவேன் என்று உறுதியான தீர்மானம் எடுக்கிறேன்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு