#

பீடத்தின் முன்

பிரியமானவர்களே! சிலுவையின் பாதை என்பது, இயேசு நடந்து சென்ற பாதை.

அந்தப் பாதை வழி நாமும் செல்ல, இங்கே கூடி வந்திருக்கிறோம்.

இப்போது கண்களை மூடி, ஜெபிப்போம்.

நம் பாவங்களினால் அல்லவோ, இந்த கொடுமையான சிலுவைப் பாதை உண்டானது என்று உணர்வோம்.

நம் பாவங்களுக்காக வருந்துவோம்.

இயேசுவே, என் சிந்தனை, சொல், செயல், நடை, உடை, தோற்றம், மனம், ஆத்துமா, சரீரம் ஆகிய ஒன்பது நிலைகளிலும் நான் பாவம் செய்தேன்.

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே, இனிமேல் ஒருபோதும், இப்படி பாவம் செய்வதில்லை என்று, இன்று உறுதியான தீர்மானம் எடுக்கிறேன்.

இதோ! என்னை பரிசுத்தப்படுத்த, உம் சிலுவையின் பாதையில் நான் வருகிறேன் ஆமென்.


இயேசுவுக்கு அநியாய தீர்ப்பிடுகிறார்கள்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

இயேசுவின் மேல் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், எதுவும் எடுபடவில்லை. கடைசியில், “தன்னைக் கடவுளாகச் செல்கிறார்” என்று அவர் வாக்கு மூலத்திலிருந்தே அவரைக் குற்றம் சாட்டினர் “இவர் மீது நான் எந்த குற்றமும் காணேன்” என்று பிலாத்து மும்முறை கூறினார். “இவனை சிலுவையில் அறையுங்கள்” என்று இறுதி தீர்ப்பு வழங்கினார். சரித்திரத்தை கறைபடுத்திய இந்த விநோத தீர்ப்பு அன்று நடந்தது.

சிந்தனை:

இயேசுவே! தீர்ப்பிடாதே, நீயும் தீர்ப்புக்குள்ளாவாய் என்று, எத்தனையோ முறை எனக்கு அறிவுறுத்தினீரே.

நான் பாவியிலும் பெரும் பாவியாக இருந்தும், என் குற்றங்களையெல்லாம் மறைக்க, பிறர் மீது குற்றம் சாட்டியிருக்கிறேன்.

அனேகரை தீர்ப்பிட்டு, “நான்” என்ற அகந்தையோடு வாழ்ந்து வருகிறேன்.

எனது பெரிய குற்றங்களை பற்றி எண்ணாமல், பிறருடைய சிறிய குற்றங்களை கூடப் பெரிதுபடுத்தியிருக்கிறேன்.

என் பாவங்களை மறைக்க, பிறர் குற்றங்களை பேசி தீர்த்தேன்.

என் குற்றங்களை யாராவது சுட்டிக்காட்டும் போது நான் எவ்வளவு விசனப்பட்டிருக்கிறேன்.

என் “சுயநலம்” கொடியது.

எனக்கு குற்றம் செய்ய உரிமை உண்டு. ஆனால் அதை சுட்டிக்காட்ட, யாருக்கும் உரிமை இல்லை என்றேன்.

என் “சுயம்” கொடியது. அது என் நேசருக்கு சாவுத் தீர்ப்பு அளித்தது.

ஆண்டவரே! இந்த பாவங்களினால், எனக்கும், என் குடும்பத்துக்கும் வரவேண்டிய ஆசீர்வாதங்கள், தடைப்பட்டிருப்பதை நான் உணர்கிறேன்.

இனிமேல் ஒருபோதும் என் நாவு பிறருக்கு தீர்ப்பிடாது என்று உறுதியான தீர்மானம் எடுக்கிறேன்.

என் ஜெபத்தை கேட்டு, என்னை பொறுத்துக் கொள்ளும் சுவாமி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு